புதன், 6 ஜனவரி, 2021

இந்தியா முழுக்க சரிவு… கேரளா மட்டும் அதிகரிப்பு: கொரோனா ஷாக்

 மற்ற மாநிலங்கள் அனைத்தும் கோவிட் -19 நோய்த்தொற்று எண்ணிக்கையில் நிலையான சரிவைக் கூறி வருகின்றன. கேரளா மட்டும் அதில் விதிவிலக்காக உள்ளது. ஒருமுறை பரவலைக் கட்டுப்படுத்தியதற்காகப் பாராட்டப்பட்ட கேரளாவில் இப்போது மகாராஷ்டிராவை விடவும் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் உள்ளன. சனிக்கிழமை நிலவரப்படி, கேரளாவில் 65,452 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது முழு நாட்டிலும் நான்கில் ஒரு பங்கிற்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் நடுப்பகுதியிலிருந்து நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கிறது என்று அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. தற்போது, இந்தியா ஒரு நாளைக்கு சுமார் 20,000 புதிய வழக்குகளைக் கண்டறிந்து வரும் போது, கிட்டத்தட்ட 25% கேரளாவில் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூலை நடுப்பகுதி வரை, தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் கேரளா மிகவும் வெற்றிகரமான மாநிலமாகக் கருதப்பட்டது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சில நாட்களுக்கு, பூஜ்ய வழக்குகள் கூட இங்குப் பதிவாகியிருந்தன. மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் ஏற்கெனவே ஒரு நாளைக்கு 1,000-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைப் பதிவு செய்தது. ஜூலை நடுப்பகுதியில்  கேரள மாநிலம் கணிசமான எண்ணிக்கையைப் புகாரளிக்கத் தொடங்கியது. ஓணம் பண்டிகைக்குப் பிறகு பெரிய எழுச்சி ஏற்பட்டது.

செப்டம்பர் இரண்டாவது வாரம் வரை, ஒரு லட்சத்துக்கும் குறைவான வழக்குகள் இந்த மாநிலத்தில் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிராவில் பத்து மடங்கு அதிகமான எண்ணிக்கை இருந்தது. அதன்பிறகு ஒரு திருப்பம் ஏற்பட்டது. அக்டோபரிலிருந்து, கேரளாவில் 5.67 லட்சத்திற்கும் அதிகமான புதிய எண்ணிக்கை கண்டறியப்பட்டுள்ளன. இது நாட்டின் வேறு எந்த மாநிலத்தையும் விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இது தற்போது மொத்த எண்ணிக்கையில் 7.71 லட்சமாக உள்ளது. தற்போதைய நிலை இருந்தால், கேரளா சுமார் மூன்று வாரங்களில் தமிழகத்தை முந்திக்கொள்ளும். நான்காவது இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் சுமார் 8.20 லட்சம் எண்ணிக்கை உள்ளன. ஆனால், இப்போது ஒவ்வொரு நாளும் 1,000-க்கும் குறைவான வழக்குகள் உள்ளன. மகாராஷ்டிராவில் 20 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் கொண்டு நாட்டின் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து கர்நாடகா- 9.21 லட்சம், ஆந்திரா-8.82 லட்சம் என பதிவாகியுள்ளன.