செவ்வாய், 19 ஜனவரி, 2021

தடுப்பூசிக்கு மருத்துவமனை ஊழியர் மரணம்: உ.பி. அதிகாரிகள் கூறுவது என்ன?

 கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட 24 மணி நேரத்திற்குப் பிறகு, மொராதாபாத் பகுதியைச் சேர்ந்த  ஞாயிற்றுக்கிழமை 46 வயதான அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவர் மரணமடைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  உயிரிழந்தவரின் பெயர் மஹிபால் சிங். வயது 46.

தடுப்பு மருந்து  நிர்வகிக்கப்பட்ட  பின்பு உடல்நிலை மோசமடைந்ததாக அவரது குடும்ப  உறுப்பினர்கள் குற்றம் சாட்டிய நிலையில், தடுப்பூசிக்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று மொராதாபாத் தலைமை மருத்துவ அதிகாரி (சி.எம்.ஓ) எம்.சி. கார்க் கூறினார். மொராதாபாத் மாவட்ட மருத்துவமனையில் வார்டு ஊழியாரகா பணிபுரிந்து வரும் மஹிபால் சிங்  சனிக்கிழமை பிற்பகல்  தடுப்பூசி போட்டுக் கொண்டார். மூச்சுப்பிடிப்பு மற்றும் மார்பு வலி காரணமாக மறுநாள் அவரது உயிர் பிரிந்தது.

இருதய நோய் காரணமாக  ஏற்பட்ட  செப்டிசெமிக் அதிர்ச்சி” (septicemic shock) இறப்புக்கான உடனடி காரணம் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில்  கண்டறியப்பட்டது.

மேலும்,”இறந்தவரின் இரண்டு  நுரையீரல்களிலும் சீழ் கட்டிகள் (pus pockets) காணப்படுகிறது. அதே நேரத்தில் வலது  `வென்ட்ரிக்கிளின்’ (Ventricle) அதிக தசை வளர்ச்சி மற்றும் இதயச் சதையில் கொழுப்புச் சிதைவு உள்ளது. பெருநாடி மற்றும் இதய அறைகளில் அதிக அளவு இரத்தம் உறைந்த நிலையில் இருந்து. இறந்தவரின் நுரையீரல், இதயம் மற்றும் இரத்த மாதிரிகள் இரண்டும் ஹிஸ்டோபோதாலஜி பரிசோதனைக்கு பாதுகாக்கப்பட்டுள்ளன” என்றும் பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டது.

தடுப்பூசி நிர்வகிக்கப்பட்டதால் தான் தனது தந்தை உயிரிழந்ததாக இறந்தவரின் மகன் விஷால் சிங் குற்றம் சாட்டியுள்ளார். ” என் தந்தையின் மரணத்திற்கு காரணம் தடுப்பபூசி தான். இதற்கு, அரசாங்கம் முழு பொறுப்பேற்க வேண்டும்…. தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு,மதியம் 1.30 மணியளவில் வெளியே வந்தார். நான் அவரை வீட்டிற்கு அழைத்து வந்தேன். அப்போது, அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தடுப்பூசி எடுத்துக் கொல்வதற்கு முன்பாக நிமோனியாவும், சாதாரண இருமலும் இருந்தது. ஆனால், தடுப்பு மருந்தின் முதல் டோஸ் எடுத்துக் கொண்ட பிறகு, அவரது நிலை மோசமடைந்தது, ”என்று தெரிவித்தார். தடுப்பூசியை நிர்வகிக்கும் முன் எந்தவித மருத்துவப் பரிசோதனைக்கும் ஏன்  உட்படுத்தப்படவில்லை என்று கேள்வியும் பலர் எழுப்பி வருகின்றன.

இந்த குற்றச்சாட்டுகளில் மறுத்த தலைமை மருத்துவ அதிகாரி,” சனிக்கிழமை இரவு சிங் வழக்கம்போல் தனது பணியை மேற்கொண்டுள்ளார். தடுபூச்சி  காரணமாக மரணம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஏனெனில், அன்று இரவு அவருக்கு எந்த அசவுகரியமும் உணரவில்லை.   ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மார்பு வலி மற்றும் மூச்சு அடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன் மரணமடைந்தார். கோவிட் தடுப்பூசி அவருக்கு சனிக்கிழமை பிற்பகல் வழங்கப்பட்டது. அன்று இரவு அவருக்கு எந்த உடல் உபாதைகளும் ஏற்படவில்லை ,” என்று தெரிவித்தார்.

மாரடைப்பு காரணமாக இறந்ததால், இதை தடுப்பூசியின் நேரடி எதிர்வினை என்று  எடுத்துக்கொள்ள முடியாது  என்று உத்தர பிரதேச மாநில அரசும் தெரிவித்துள்து.

முன்னதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ” கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ், தற்போது வரை 2,24,301 பயனாளிகளுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டது. ஜனவரி 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகு 447 பேருக்கு சிறிய உடல் உபாதைகள் ஏற்பட்டன. இவர்களின் மூவர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் தில்லியின் வடக்கு ரயில்வே மருத்துவமனையிலிருந்து 24 மணி நேரத்தில் குணமடைந்து வீடு திரும்பினார்.‌ மற்றொருவர் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார். பெரும்பாலோனோருக்கு காய்ச்சல், தலைவலி, குமட்டல் போன்ற சிறிய உடல் உபாதைகள் ஏற்பட்டன ” என தெரிவித்தது.

source: https://tamil.indianexpress.com/india/moradabad-government-hospital-employee-died-after-receiving-the-first-dose-of-covid-19-vaccine-243014/