இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து போண்டியானாக் பகுதிக்கு 62 பயணிகளுடன் புறப்பட்ட ஸ்ரீவிஜயா விமான பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடாரிலிருந்து மறைந்துள்ளது. விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் இருந்து 62 பயணிகளுடன் புறப்பட்ட ஸ்ரீவிஜயா பயணிகள் விமானம் ஜெட் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுடனான தொடர்பை இழந்தது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2.60 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட இந்தோனேஷியா நாடு பழைய உள்கட்டமைப்பு மற்றும் மோசமான பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக நிலம், கடல் மற்றும் விமானப் போக்குவரத்துகள் விபத்துக்களால் பாதிக்கப்படுகிறது.
இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அடிதா ஐராவதி கூறுகையில், போயிங் 737-500 ஜகார்த்தாவிலிருந்து மதியம் 1:56 மணியளவில் புறப்பட்டு மதியம் 2:40 மணிக்கு கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது என்று தெரிவித்துள்ளது.
“தற்போது காணாமல் போன விமானத்தை தேடும் பணி தீவிரமாக உள்ளது. தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு குழுவுடன் ஒருங்கிணைந்து தேடப்படுகிறது” என்று ஐராவதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.