சனி, 23 ஜனவரி, 2021

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட உலகத் தலைவர்கள்!

 மக்களின் அச்சத்தைத் தவிர்க்க முன்னுதாரணமாக கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட உலக நாடுகளின் தலைவர்களைப் பார்ப்போம்.


2020 வருடம் முழுவதும் உலக நாடுகளை கொரோனா தன் கோர தாண்டவத்தால் நிலைகுலையச் செய்தது. 2020ஆம் ஆண்டின் இறுதியில்தான் கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணிகள் நிறைவுற்று ஒப்புதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்ஸின் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 16ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பொதுமக்களிடையே கொரோனா தடுப்பூசி குறித்து ஏற்படும் அச்சத்தை தவிர்ப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இரண்டாவது கட்ட தடுப்பூசி போடப்படும் நிகழ்வில் பிரதமர் மோடி தடுப்பூசி எடுத்துக்கொள்வார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்பு தாமாக முன்வந்து தடுப்பூசி எடுத்துக்கொண்ட உலக நாடுகளின் தலைவர்களின் விவரங்களைப் பார்ப்போம்.

அமெரிக்க அதிபராக பொறுப்பு ஏற்கும் முன்பே ஜோ பைடன் தொலைக்காட்சி முன்பு நேரலையில் பைசர் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். இதுபோலவே துணை அதிபர் கமலா ஹாரீஸும் நேரலையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு டிசம்பர் 20ஆம் தேதியும், சவுதி அரேபியா அரசர் சல்மான் ஜனவரி 9ஆம் தேதியும் தடுப்பூசி எடுத்துக்கொண்டனர்.

போப் ஆண்டவர் பிரான்சிஸ் மற்றும் முன்னாள் போப் ஆண்டவர் 16ஆம் பெனடிக்ட் ஆகியோர் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டனர். உலக நாடுகளின் தலைவர்கள் தடுப்பூசி போட வேண்டுமென போப் பிரான்சிஸ் வலியுறுத்தினார். ஜனவரி முதல் வாரத்தில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் அவரது கணவர் பிலிப்ஸ் ஆகியோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

இந்தோனிஷியா அதிபர் ஜோகோ விடோடோ ஜனவரி 13ஆம் தேதி சினோவாக் தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். அர்ஜெண்டினா அதிபர் ஆல்பர்ட் பெர்னான்டஸுக்கு ஜனவரி 21ஆம் தேதி தடுப்பூசி போடப்பட்டது. துருக்கி அதிபர் எர்துகான் ஜனவரி 14ஆம் தேதியும், செஷல்ஸ் அதிபர் வேவல் ராம்கலவான் 10ஆம் தேதியும் தடுப்பூசி எடுத்தனர்.

https://www.news7tamil.live/covid-19-vaccine-joe-biden-other-world-leaders-vaccinated.html