செவ்வாய், 5 ஜனவரி, 2021

அரசியல் சண்டைகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வருவது ஏன்? புதிய தலைமை நீதிபதி கேள்வி

 

வழக்க தொடரப்பட்டதாக அப்பாவு  தரப்பு வழக்கறிஞர் பதிலளித்தனர்

By: Updated: January 5, 2021, 07:28:02 AM

கடந்த 2018 ஆம் ஆண்டு, ஊழல் தடுப்புச் சட்டம் 1988ஐ மத்திய அரசு திருத்தி அமைத்தது. இச்சட்டத்  திருத்தத்தின் கீழ், அரசாங்கத்தின் பணியில் இருக்கும் அல்லது அதனிடம் சம்பளம் பெறும் அல்லது பொதுக்கடமை புரியும் ஊழியர்களுக்கு எதிரான புகார்கள் மீது விசாரணை நடத்த தகுதியான அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்கள் குறித்து விசாரிக்க பொதுத்துறை செயலாளர் ஒப்புதல் பெற வேண்டும் என்று தெரிவித்தது.

இந்நிலையில், திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புகார் மனுவில்,” தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக தானும், திமுக நிர்வாகிகளும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரிடம் புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  பொதுச் செயலாளர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அரசு நிர்வாகத்தில் எழும்  புகார்கள் குறித்து விசாரணைக்கு ஒப்புதல் அளிக்க மாநில ஆளுநருக்கு அரசியல் சாசனம் அதிகாரம் வழங்கியுள்ளது.  பொதுச் செயலாளர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. அமைச்சகத்தின் முடிவிற்கு கட்டுப்பட்டு ஆக வேண்டும். அவர், முதல்வர் மற்றும் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் அதிகாரியாக கருத முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.  எனவே, ஆளுநர் உரிமையை மறுக்கும் இந்த சட்ட திருத்தத்திற்கும், தமிழக அரசு வெளியிட்ட அரசாணையையும் ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.

இன்று, இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக  பொறுபேற்றுக் கொண்ட சஞ்ஜீப் பானர்ஜி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி, ” அரசியல் சண்டைகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வருவது ஏன்? அரசியல் களத்தில் சந்திக்க வேண்டியது தானே ? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு,” அரசாணையின் சட்டத்தன்மை குறித்தும், அரசியலமைப்பு சாசன விதிமுறைகள் குறித்தும் தான் வழக்க தொடரப்பட்டதாக அப்பாவு  தரப்பு வழக்கறிஞர் பதிலளித்தனர்.

அனைத்து வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, இதுகுறித்து ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இன்று பொறுபேற்றுக் கொண்ட சஞ்ஜீப் பானர்ஜி,  சென்னை உயர்நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாவார்.