புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக , ஜனாவரி 26 குடியரசு தின விழாவின் போது, விவசாய சங்கங்கள் அறிவித்த ‘டிராக்டர் அணிவகுப்பு’ போராட்டத்தில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த எண்ணற்ற கிராமப்புறப் பெண்கள் கலந்து கொள்ள தயாராகி வருகின்றனர்.
நேற்று, ஜிண்ட்-பாட்டியாலா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கட்கர் டோல் பிளாசாவில் ஜிண்ட் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களுக்கு போர்க்கால அடிப்படையில் டிராக்டரை இயக்கும் பயிற்சி வழங்கப்பட்டது. ஹரியானா மாநிலம் முழுவதும் பல இடங்களில், இத்தகைய பயிற்சியில் பெண்கள் ஆர்வமாக கலந்து கொண்டு வருகின்றனர்.
ஒரு மாதத்துக்கும் மேலாக, டெல்லி எல்லையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில், பெண்கள் பெருமளவில் கலந்து கொண்டுள்ளனர். ஜனவரி 26 ஆம் தேதி பெண்கள் டிராக்டர் அணிவகுப்பு போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலம், ஹரியானாவில் நிலவும் ஆணாதிக்கச் சமூகத்தின் அடிப்படையை கேள்வி கேட்பதோடு, விவசாய சங்கங்களின் போராட்டங்களின் மேலும் நியாயப்படுத்துவதாக அமையும்.
ஹரியானா மாநிலம் முழுவதிலும் உள்ள சுங்கச்சாவடிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் முடக்கியுள்ளனர். தற்போது, கட்கர் சுங்கச் சாவடியில்- ஒரு டிராக்டரை எவ்வாறு கையாள்வது, அணிவகுப்பில் எவ்வாறு செல்வது போன்ற அடிப்படை பயிற்சிகளில் கிராமப்புற பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்வேறு சுங்கச் சாவடிகளில் நூற்றுக்கணக்கான பெண்கள் பயிற்சி அமர்வுகளில் கலந்துகொண்டுள்ளனர். மாநிலம் முழுவதும் இதே போன்ற பயற்சிகள் அளிக்கப்பட்டுவருகிறது. இது ஒரு டிரெய்லர் தான்.செங்கோட்டையில் எங்களது ஒவ்வொரு டிராக்டரும் பெருமிதத்துடன் அணிவகுக்கும் . இது ஒரு வரலாற்று நிகழ்வாக இருக்கும் ”என்று சஃபா கெரி கிராமத்தைச் சேர்ந்த சிக்கிம் நெய்ன் தெரிவித்தார்.
” பெண்கள் நாங்கள் போராட்டக் களத்தை முன்னெடுக்க இருக்கிறோம். எதிலும், பின்வாங்கப் போவதில்லை. எங்களை லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இது இரண்டாவது சுதந்திரப் போர். இன்று நாங்கள் போராடவில்லை என்றால், எதிர்கால சந்ததியினருக்கான நமது குரல் என்னவாக இருக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.
source: https://tamil.indianexpress.com/india/women-from-haryana-villages-joining-tractor-parade-protest-on-republic-day-240860/