மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், விவசாயிகளை சமாதானப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு மேற்கொண்ட பல கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், வேளாண் சட்டங்கள் தொடர்பாக நேற்று மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த பேச்சுவார்த்தையில், விவசாயிகள் சார்பில் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு சட்டத்தில் மாற்றங்கள் செய்ய பரிந்துரைக்கலாம். ஆனால் ரத்து செய்ய முடியாது என தெரிவித்துள்ளது.
இதனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. மேலும் இது குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் ஜனவரி 15 ம் தேதி நடபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு ஜனவரி 11-ந்தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில், 15-ந்தேதி நடைபெறும் அடுத்த பேச்சுவார்த்தையை விட 11-ந் தேதியையே விவசாயிகள் உற்றுநோக்கி காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று விவசாயகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட தோமர் கூறுகையில், “வேளாண் சட்டங்கள் குவித்த இன்று விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தில், எந்த முடிவையும் எட்ட முடியவில்லை. இந்த சட்டத்தை ரத்து செய்வதைத் தவிர வேறு வழி ஏதாவது பரிந்துரைக்குமாறு விவசாய அமைப்புகளுடன் அரசு கேட்டுக்கொண்டது. ஆனால், விவசாயிகள் இதற்கு மறுப்பு தெரிவித்த்தால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆனால் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் (ஜன.15 ஆம் தேதி ) தீர்வு காண முடியும் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் விவசாய சங்கங்கள் இந்த விஷயத்தை உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லுமாறு அரசு பரிந்துரைத்துள்ளதாகவும், இதனை ஏற்று விவசாயிகள் நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் தெரிவித்த அவர், இந்த வழக்கு வரும் 11-ந் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாக தெரிவித்தார். மேலும் ஒரு ஜனநாயக நாட்டில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில், ஒரு சட்டம் இயற்றப்பட்டால், அந்த சட்டத்தை பகுப்பாய்வு செய்ய உச்சநீதிமன்றத்திற்கு உரிமை உள்ளது. அது ஒரு சாதாரன குடிமகனாக இருந்தாலும் சரி, அரசாக இருந்தாலும் சரி நீதிக்காக நீதிமன்றம் செல்ல உரிமை உள்ளது. உச்சநீதிமன்றத்தின் எந்தவொரு முடிவிற்கும் அரசு கட்டுப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பேச்சுவார்த்தை குறித்து அகில இந்திய கிசான் சபாவின் பஞ்சாப் பொதுச்செயலாளர் பல்தேவ் சிங் நிஹல்கர் கூறுகையில், இந்த பேச்சுவார்த்தைகள்”மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. இதுவரை 8 பேச்சுவார்த்தையில் நாள் இருந்துள்ளேன். இன்றைய சந்திப்பு மிகவும் ஏமாற்றமளித்தது. உச்சநீதிமன்றத்திற்குச் செல்லுங்கள் அல்லது ஒரு சிறிய குழுவை உருவாக்குங்கள் என்று அரசு தரப்பு இரண்டு பரிந்துரைகளை வழங்கியது. ஆனால்நாங்கள் நீதிமன்றத்திற்கு செல்ல மாட்டோம் எங்கள் போராட்டம் தொடரும் என்று நாங்கள் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளோம் என, ”கூறியுள்ளார்.
இது குறித்து அகில இந்திய கிசான் கூட்டமைப்பின் தலைவர் பிரேம் சிங் பாங்கு கூறுகையில், “எதிர்பார்த்தபடி, இன்றைய சந்திப்பும் எவ்வித முன்னேற்றத்தையம் அளிக்கவில்லை. ஜனவரி 4 கூட்டத்தில், வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான நடைமுறை குறித்து பேச்சுவார்த்தை தொடங்கும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வேளாண் சட்டங்கள் மிகச் சிறந்தவை என்றும், இதில் நீங்கள் திருத்தங்களுக்கு பரிந்துரை செய்யலாம் என்றும் வேளாண் அமைச்சர்கள் மீண்டும் பிரச்சாரம் செய்தாக தெரிவித்துள்ளார்.
மேலும் இது ஒரு அரசு சார்ந்த விஷயமாக இருப்பதால் ஜனவரி 11 ம் தேதி வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்குச் செல்வார்கள், என்ன நடக்கிறது என்று பார்ப்போம். எந்தவொரு திசையும் எங்களுக்கு எதிராக இருந்தால், நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்போம், “என்றும் கூறியுள்ளார். ஜம்ஹூரி கிசான் சபாவின் தலைவர் குல்வந்த் சிங், “உச்சநீதிமன்ற விசாரணை வரை காத்திருக்க அரசு ஏன் இவ்வளவு ஆர்வமாக உள்ளது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய நீதிமன்றத்தை அணுகுமாறு அவர்கள் தான் பரிந்துரைத்தார்கள் என்று கூறியுள்ளார்.
source: https://tamil.indianexpress.com/india/for-farmers-awaiting-court-hearings-against-agricultural-laws-241631/