மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் அரியான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் விவசாயிகளை சமாதானப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு விவசாயிகளிடம் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தால் போராட்ட களத்தில் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில், தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், “முதலில் சட்டத்தை நிறுத்தி வையுங்கள், அதன் பிறகு பேச்சுவார்த்தை நடத்துங்கள். தற்போதைய சூழலில் எப்போது வேண்டுமானாலும் விவசாயிகளின் உடல் நலனுக்கு பாதிப்பு ஏற்படலாம். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேசி வேறு பாதுகாப்பான இடத்தில் அவர்கள் போராட்டத்தை தொடருமாறு கேட்டுக் கொள்ள முயற்சி செய்யுங்கள் என்று நீதிபதிகள் மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்தனர். மேலும் வேளாண் சட்ட விவகாரங்களை தீர்க்க குழு அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்றத்தின் இந்த கருத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ள விவசாயிகள், இந்த விவகாரத்தை தீர்க்க குழு அமைக்கும் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நீதிமன்றத்தின் இந்த கருத்துக்கு பிறகு, அறிக்கை வெளியிட்ட விவசாய அமைப்புகளின் கூட்டு மன்றமான சன்யுக்ட் கிசான் மோர்ச்சா தனது அறிக்கையில், உச்சநீதிமன்றம் நியமிக்கும் எந்தவொரு குழுவிற்கும் நாங்கள் உடன்படவில்லை என்பதை (எங்கள் வழக்கறிஞர்களுக்கு) தெரிவித்தோம்.
அரசாங்கத்தின் பிடிவாதமான அணுகுமுறை காரணமாக. “”வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கும் அனைத்து விவசாயிகள் அமைப்புகளும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்படக்கூடிய எந்த ஒரு குழுவின் நடவடிக்கைக்கும், விவசாயிகள் ஒத்துழைப்பு கொடுக்கமாட்டார்கள் ” என்று மோர்ச்சாவின் ஒருங்கிணைப்பாளரும் பஞ்சாபின் கிராண்டிகாரி கிசான் யூனியனின் தலைவருமான டாக்டர் தர்ஷன் பால் கூறினார். இதனைத் தொடர்ந்து பஞ்சாபின் மிகப்பெரிய விவசாய சங்கமான பி.கே.யூ உக்ரஹானின் தலைவர் ஜோகிந்தர் சிங் உக்ரஹான் கூறுகையில்,
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. உச்சநீதிமன்றத்தின் விசாரணையை நாங்கள் பாராட்டுகிறோம். இதில் மத்திய அரசு விவசாயகளின் பிரச்சினையை தீர்க்கவில்லை என்று நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. எங்கள் தொடர்ச்சியான போராட்டத்திற்கான மரியாதையாக இதை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். ஆனாலும் இந்த சிக்கலை தீர்க்க ஒரு குழுவை அமைப்பதற்கான யோசனையை நாங்கள் ஏற்கவில்லை . பொது நலனை மனதில் வைத்து இந்த சட்டங்களை ரத்து செய்ய மத்திய அரசு வழி செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பஞ்சாப் கிசான் யூனியனின் தலைவர் ருல்டு சிங் கூறுகையில், நாங்கள் நீதிமன்றத்தை மதிக்கிறோம், ஆனால் சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படாவிட்டால் நாங்கள் திரும்பிச் செல்ல மாட்டோம். நீதிமன்றம் பொது பொதுமக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியும் என்றால், அவர்கள் மத்திய அரசுடன் பேசி விவசாய சட்டங்களை ரத்து செய்யச் சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சன்யுக்ட் கிசான் மோர்ச்சாவின் ஒரு பகுதியாக இருக்கும் அகில இந்திய கிசான் கூட்டமைப்பின் (பஞ்சாப் பிரிவு) தலைவர் பிரேம் சிங் பாங்கு கூறுகையில், “ வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை நாங்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கிறோம். சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார்.. ”
அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவின் (ஏ.ஐ.கே.எஸ்.சி.சி) உறுப்பினர் ஜக்மோகன் சிங் பாட்டியாலா கூறுகையில், “இந்த விசாரணை செவ்வாய்க்கிழமை (இன்று) வரை தொடர இருப்பதால் நாங்கள் எங்கள் வழக்கறிஞர்களுடன் விசாரணை குறித்து விவாதித்து வருகிறோம். ஆனாலும் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
அகில இந்திய கிசான் கூட்டமைப்பின் (ஹரியானா பிரிவு) பிரேம் சிங் கெஹ்லாவத் கூறுகையில், “நீதிமன்றத்தின் விசாரணையை நாங்கள் வரவேற்கிறோம், அரசாங்கத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லாததால் சட்டங்களை ரத்து செய்வதே எங்களது கோரிக்கையாக வைத்துள்ளோம். இந்த சட்டங்களை நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
source: https://tamil.indianexpress.com/india/farmers-protest-in-delhi-high-court-proposed-committee-aganist-farmers-law-242076/