பாரத் பயோடெக் உருவாக்கிய கோவாக்சின், மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு – அஸ்ட்ராஜெனேகா கண்டுபிடித்த தடுப்பூசி கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை தேசிய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்தது. இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிப்பதற்கு உரிமம் பெற்று உற்பத்தி செய்கிறது.
நாவல் கொரோனா வைரஸுக்கு எதிராக போராடும் முன்னுரிமைப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு நாடு இறுதி நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில், கோவிட் – 19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் அரசு நிர்வாகத்தில் முன்னணியில் இருந்த எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, தடுப்பூசி குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், அவர் அளித்த விளக்கங்கள் தொகுத்து தரப்பட்டுள்ளது.
கோவிட் -19 தடுப்பூசி முதலில் யாருக்கு எப்படி கிடைக்கும்?
சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் போன்ற முன்னுரிமை குழுக்கள் தடுப்பூசி போடுவதற்கான பட்டியலில் முதலில் உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து, 50 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் கொண்ட நபர்கள் உள்ளனர்.
தகுதியான பயனாளிகளுக்கு சுகாதார துறை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்கள் மூலம் தெரிவிக்கப்பட்டு சுகாதார அட்டவனைப்படி தடுப்பூசி போடப்படும்.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிப்பதற்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்:
தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமா?
தடுப்பூசியை தானாக முன்வந்து போட்டுக்கொள்ள வேண்டும். இருப்பினும், நம்மை, நம்முடைய அருகிலுள்ள மற்றும் அன்பானவர்கள், நம்முடைய நெருங்கிய தொடர்புகள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக ஊழியர்களைப் பாதுகாப்பதற்காக தடுப்பூசி அட்டவணையை பூர்த்தி செய்வது நல்லது.
சுகாதாரத்துறையில் பதிவு செய்வது கட்டாயமா?
தடுப்பூசி போடுவதற்கு பதிவு செய்வது கட்டாயம். தடுப்பூசி அமர்வு தளத்தில் தடுப்பூசி போடப்படும் இடத்தைப் பார்வையிடுவதற்கான நேரம் ஆகிய தகவல் பதிவு செய்த பின்னரே பயனாளிகளுக்கு பகிரப்படும்.
பதிவு செய்வதற்கு மொபைல் போன் செயலி உருவாக்கப்படுகிறது.
தடுப்பூசி போடுவதற்கு ஒருவருக்கு என்ன ஆவணங்கள் தேவை?
தடுப்பூசி போட்டுக்கொள்ள ஒருவர் ஓட்டுநர் உரிமம், சுகாதார காப்பீடு, தொழிலாளர் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, எம்.என்.ஆர்.இ.ஜி.ஏ அட்டை, எம்.என்.ஆர்.இ.ஜி.ஏ வேலை அட்டை, எம்.பி.க்கள் வழங்கிய அதிகாரப்பூர்வ அடையாள அட்டை, எம்.எல்.ஏக்கள், பான் கார்டு, வங்கி அல்லது தபால் நிலையத்தின் பாஸ்புக், பாஸ்போர்ட், ஓய்வூதிய ஆவணங்கள் மத்திய / மாநில அரசு அல்லது பொது நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சேவை அடையாள அட்டை, மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் ஆகையவற்றை பதிவு செய்ய பயன்படுத்தலாம்.
தடுப்பூசி போடப்படும் தேதி குறித்த தகவல்களை பயனாளிகள் எப்படி பெறுவார்கள்?
பயனாளிகள் ஆன்லைனில் பதிவு செய்ததைத் தொடர்ந்து, தடுப்பூசி போடப்படும் தேதி, இடம் மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் பெறுவார்கள். தடுப்பூசி போட்டுக்கொண்டவுடன் பயனாளி மேலும் ஒரு எஸ்எம்எஸ் பெறுவார். தடுப்பூசி எல்லாம் போடப்பட்ட பிறகு, கியூஆர் குறியீடு சான்றிதழ் ஒன்று பயனாளியின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.
தடுப்பூசி போடும் இடத்தில் ஒருவர் பின்பற்ற வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கைகள் ஏதேனும் உள்ளதா?
ஒருவர் கோவிட் -19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு குறைந்தது அரை மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும். ஏதேனும் அறிகுறிகள் அல்லது அசௌகரியங்கள் ஏற்பட்டால் அருகிலுள்ள துணை செவிலியர் (ஏ.என்.எம்) அல்லது சுகாதாரப் பணியாளருக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
தடுப்பூசி பாதுகாப்பானதாக இருக்குமா?
பாதுகாப்பு என்பது மிக முக்கியமான காரணியாக இருக்கும். தடுப்பூசி ஒப்புதல் வழங்குவதற்காக கடந்த காலங்களில் பின்பற்றப்பட்ட அனைத்து நிலையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இந்த தடுப்பூசி விஷயத்திலும் பின்பற்றப்படும்.
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் தடுப்பூசி மற்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட மருந்துகளைப் போலவே பயனுள்ளதாக இருக்குமா?
ஆம், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் கோவிட் -19 தடுப்பூசி மற்ற நாடுகளில் உருவாக்கப்படும் எந்தவொரு தடுப்பூசியைப் போலவே பயனுள்ளதாக இருக்கும்.
பல தடுப்பூசிகளில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தடுப்பூசிகள் நிர்வாகத்திற்கு எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறது?
தடுப்பூசி நிறுவனத்தின் மருத்துவ பரிசோதனைகளிலிருந்து பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தரவு உரிமம் வழங்குவதற்கு முன் இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளரால் முழுமையாக ஆராயப்படுகிறது. எனவே, உரிமங்களைப் பெறும் அனைத்து கோவிட் -19 தடுப்பூசிகளும் ஒப்பிடத்தக்க பாதுகாப்பு மற்றும் செயல்திறனைக் கொண்டிருக்கும். இருப்பினும், வெவ்வேறு கோவிட் -19 தடுப்பூசிகள் ஒன்றோடொன்று மாறாததால், தடுப்பூசியின் முழு அட்டவணையும் ஒரே ஒரு வகை தடுப்பூசியுடன் முடிக்கப்படுவதை நாம் உறுதிப்படுத்துவது முக்கியம்.
கோவிட் -19 தொற்று உள்ள ஒருவருக்கு தடுப்பூசி போடலாமா?
தடுப்பூசி போடும் இடத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு அறிகுறி உள்ள ஒரு நபர் மூலம் மற்றவர்களுக்கும் தொற்று பரவும் ஆபத்தை அதிகரிக்கக்கூடும். மேலும், ஒருவர் ஏற்கெனவே தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும்போது, அத்தகைய சூழ்நிலையில் தடுப்பூசி எந்தளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது நமக்குத் தெரியாது. தொற்று அறிகுறிகள் சரியான பிறகு தொற்று உள்ள நபர்கள் குறைந்தது 14 நாட்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்வதை தள்ளி வைக்க வேண்டும்.
தொற்றில் இருந்து மீண்ட ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியமா?
நோய்த்தொற்றின் கடந்த கால பாதிப்புகளைப் பொருட்படுத்தாமல் கோவிட் தடுப்பூசியின் முழுமையான அட்டவணையைப் பெறுவது நல்லது. இது தொற்றுநோய்க்கு எதிராக சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவும்.
புற்றுநோய், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு மருத்து எடுத்துக்கொள்பவர்களை தடுப்பூசி பாதிக்குமா?
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நோய்களைக் கொண்டுள்ள நபர்கள் தடுப்பூசி போட்டுக்க்கொள்ள வேண்டும். ஏனென்றால், அவர்கள் அதிக ஆபத்துள்ள குழுவின் பகுதியாக உள்ளனர். அந்த நோய்க்கான மருந்துகள் தடுப்பூசி செயல்திறனில் குறுக்கிடாது.
என்ன பக்க விளைவுகள் இருக்கும்?
மற்ற தடுப்பூசிகளைப் போல, தடுப்பூசி போட்டுக்கொள்ளும் சிலருக்கு லேசான காய்ச்சல், ஊசி போடப்பட்ட இடத்தில் வலி, உடல் வலி போன்ற சில பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். பாதுகாப்பான தடுப்பூசி விநியோகத்திற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக கோவிட் -19 தடுப்பூசி தொடர்பான பக்க விளைவுகளை சமாளிக்க ஏற்பாடுகள் செய்யுமாறு மாநில அரசுகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஒரு நபர் எத்தனை தடுப்பூசி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்? எவ்வளவு கால இடைவெளியில் எடுத்துக்கொள்ள வேண்டும்?
இரண்டு தடுப்பூசியை எடுத்துக் கொள்வதற்கு ஒருவருக்கு 28 நாட்கள் இடைவெளி தேவை. தடுப்பூசி அட்டவனையை முடிப்பதற்கு இதை அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நோய் எதிர்ப்பு எப்போது உருவாகும்? முதல் டோஸ் போட்டுக்கொண்ட பிறகா? இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்ட பிறகா? அல்லது அதற்கும் பிறகா?
நோய் எதிர்ப்பு சக்தி பாதுகாப்பு அளவுகள் பொதுவாக கோவிட் -19 தடுப்பூசி இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு உருவாகும்.
தடுப்பூசியை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சேமித்து தேவையான வெப்பநிலையில் கொண்டு செல்லும் திறன் இந்தியாவுக்கு உள்ளதா?
இந்தியா உலகின் மிகப்பெரிய நோய்த்தடுப்பு திட்டங்களில் ஒன்றை நடத்துகிறது. இந்தியா, ஏற்கெனவே 26 மில்லியனுக்கும் அதிகமான பிறந்த குழந்தைகள் மற்றும் 29 மில்லியனுக்கும் அதிகமான கர்ப்பிணிப் பெண்களின் தடுப்பூசி தேவைகளை பூர்த்தி செய்கிறது. நாட்டின் பெரிய மற்றும் மாறுபட்ட மக்கள்தொகையை திறம்பட பூர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
source: https://tamil.indianexpress.com/explained/india-coronavirus-covid-19-vaccination-questions-and-answers-240903/