வெள்ளி, 15 ஜனவரி, 2021

தமிழர்களுடன் நின்று பாரம்பரியத்தை பாதுகாப்பது எனது கடமை: ராகுல் காந்தி

 தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி, நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியை நேரில் காண, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி இன்று தமிழகம் வந்தார். மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கிய ராகுல் காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி  ஸ்டாலினுடன் சேர்ந்து ராகுல் காந்தி நேரில் கண்டு மகிழ்ந்தார்.

 

 

பின்னர் உறையாற்றிய ராகுல் காந்தி, ” தமிழகத்தின்  பாரம்பரியத்தை நேரில் கண்டு களித்ததில் மகிழ்ச்சி கொள்கிறேன். முழுமையான அணுகுமுறைகள் மூலம்  காளை மாடுகளுக்கும், காளையர்களுக்கும் பாதுகாப்பாக இந்த ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி முடிக்கப்பட்டது.  இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியைக் காணவே நான் இங்கு வந்துள்ளேன். இந்தியாவின் எதிர்காலத்திற்கு தமிழ் மொழி கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் மிக மிக முக்கியம். அதனை இந்தியர்கள் அனைவரும் உணர வேண்டும்.தமிழக மக்களுடன் நின்று அவர்களின் வரலாற்றை, பாரம்பரியத்தை காக்க வேண்டியது என் கடமை” என்று தெரிவித்தார்.

 

 

முன்னதாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் கணக்கில், “அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். உங்களுடன் தைப் பொங்கல் கொண்டாட இன்று தமிழகம் வருகிறேன். மதுரையில் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்கிறேன்” என்று தமிழில் பதிவிட்டார்.

 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் தென்பழஞ்சியில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பொதுமக்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்.

 


தமிழர்களின் பண்பாட்டைப் போற்றுகிற வகையில் அவரது பயணம் அமைந்திருப்பதைப் பெருமைப்படுத்துகிற வகையில் அணி, அணியாக காங்கிரஸ் நண்பர்கள் திரண்டு வந்ததற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ் அழகிரி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.