தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக ரியல் எஸ்டேட் தொழில் அசுர வளர்ச்சியடைந்துள்ளது. இந்த வளர்ச்சியில் பல்வேறு இங்களில் விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார் எழுந்தாலும், மக்கள் தங்களது பெயரில் வீடு, வீட்டு மனைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழை மக்களை கவரும் வகையில், பல இடங்களில் தவணை திட்டங்களில், வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ், மக்களிடம் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை தவணையாக பெறப்பட்டு, ஒரு குறிப்பிட்ட மாதங்களுக்கு பிறகு அவர்கள் செலுத்திய தொகைக்கு நிலங்களாக வழங்கப்படும். இந்த திட்டத்தில் பல இடங்களில் மக்களுக்கு நிலங்கள் கிடைத்தாலும் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மக்கள் ஏமாற்றத்தை பெரும் சந்தித்துள்ளனர். அந்த வகையில், தவணை திட்டத்தில் நிலங்கள் வழங்குவதாக பொதுமக்களிடம் பணம் வசூலித்து தங்களது உறவினர்கள் பெயரில் நிலங்களை வாங்கி மோசடியில், ஈடுபட்ட ஒரு நிறுவனத்தின் 3,850 ஏக்கர் பரப்பளவில் உள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
இந்த வழக்கில், முடக்கப்பட்டுள்ள சொத்துக்கள் அனைத்தும், டிஸ்க் அசெட்ஸ் லீட் இந்தியா லிமிடெட், ஈகிள்ஸ் ஐ ரியல் எஸ்டேட், மேடவ் ரியல் எஸ்டேட் ஆகிய நிறுவனங்களின் முக்கிய நிர்வாக பணியாளர்கள் பெயரில் உள்ளன. 2006-ம் ஆண்டு, டி.எஸ்.சி., டிஸ்க் அக்ரோடெக் லிமிடெட், டிஸ்க் அசெட் லெட் இந்தியா லிமிடெட், டிஸ்க் அசெட் லீட் இந்தியா லிமிடெட் மற்றும் அதன் இயக்குனர்கள் வி.ஜனார்த்தனன், என்.உமாசங்கர், என்.அருண்குமார், சி.சீனிவாசன், டி.ஷியாம்சந்தர், எஸ்.ஜீவதா ஆகியோர் நிலம் தருவதாக கூறி, தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் தவணை திட்டத்தில் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அவர்கள் மீது கிரிமினல் சதி மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்த, தமிழக காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்த விசாரணையைத் தொடங்கியுள்ளர். இந்த விசாரணையில், டிஸ்க் அசெட்ஸ் லீட் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தால் மார்க்கெட்டிங் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் அயன் மார்க்கெட்டிங் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் போன்ற பல நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடம் பணம் வசூலித்தது தெரியவந்தது. இதன் மூலம் சுமார் ரூ .1,273 கோடி பணம் வசூலிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.எம்.எல்.ஏ இன் கீழ் அமலாக்கத்துறையின் விசாரணையில், பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணத்தை வைத்து தமிழகத்தின் பல இடங்களில் இந்நிறுவனம் சொத்துக்களை வாங்கியள்ளது. இந்த சொத்துக்கள் அனைத்தும் அந்நிறுவனத்தாரின் உறவினர்கள் மற்றும் பங்குதாரர்கள் என பலரது பெயர்களில் உள்ளது. ஆனால் இதில் இருந்து பணம் செலுத்திய பொதுமக்களுக்கு எவ்வித நிலமும் ஒதுக்கவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை.
இந்த பணமோசடி குற்றத்தில் ஈடுபட்டதற்காக இயக்குநர்கள் மற்றும் அந்நிறுவனத்தின் முக்கிய நிர்வாக ஊழியர்களான என் உமாஷங்கர், என் அருண்குமார், வி ஜனார்த்தனன் மற்றும் ஏ சரவண குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிறுவனத்திற்கு சொந்தமான மதுரை ராமநாதபுரம் மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள ரூ .207 கோடி மதிப்புள்ள 3,850 ஏக்கர் நிலத்தில் நிலங்கள் முடக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/enforcement-real-estate-lands-freezing-tamil-nadu-244196/