வெள்ளி, 19 நவம்பர், 2021

வன்னியர் 10.5% இடஒதுக்கீடு; உச்ச நீதிமன்றத்தில் நடிகர் கருணாஸ் கேவியட் மனு தாக்கல்

 வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நடிகர் கருணாஸ் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 % உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்தநிலையில், வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்தது. இதனையடுத்து, கடந்த 16 ஆம் தேதி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

அந்த மேல்முறையீட்டு மனுவில், நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை மீறாமல் 10.5 சதவீத இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டில்தான் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த உள்ஒதுக்கீடு வன்னியர் சமுதாயத்திற்கானது மட்டுமல்ல, 7 பிரிவினருக்கானது. அரசியலமைப்பு சட்டத்தின்படி உள்ஒதுக்கீடு தந்து சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஏற்கனவே முஸ்லிம் பிரிவினருக்கும், அருந்ததியினர் பிரிவினருக்கும் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியருக்கு உள்ஒதுக்கீடு தரப்பட்டது. ஒட்டுமொத்த நிர்வாகமும் இந்த தடை உத்தரவின் மூலம் பெரும் இன்னல்களைச் சந்தித்துள்ளது, என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நடிகர் கருணாஸ் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன் தங்கள் தரப்பு வாதத்தைக் கேட்கக் கோரி கருணாஸ் கேவியட் மனுவினை தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக கருணாஸ், அதிமுக ஆட்சியில் அவசரமாகக் கொண்டுவரப்பட்டது வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு. இதை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது. இதை அனைத்து சமுதாயத்தினர் சார்பிலும் வரவேற்கிறேன். சமூக நீதி நிலைக்க, தமிழக அரசு மேல்முறையீடு செய்யாமல் இருப்பதே அனைத்து சமுதாய மக்களை நல்வழிப்படுத்தச் சரியாக இருக்கும் என்பது எனது கருத்து. சாமானிய மக்கள் நீதிமன்றத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை இந்தத் தீர்ப்பு உறுதி செய்கிறது. என்று சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.

ஆனால் தமிழக அரசு கடந்த 16 ஆம் தேதி மேல்முறையீடு செய்ததையடுத்து, தற்போது கருணாஸ் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/actor-karunas-caveat-petition-in-sc-against-vanniyar-10-5-reservation-371375/