ஜெய் பீம் பட விவகாரத்தில், சூர்யாவை அடித்தால் ஒரு லட்சம் பரிசு என அறிவித்த பாமக நிர்வாகி மீது வழக்கு பதிவு மட்டும் செய்தது போதுமா ? ஹெச்.ராஜா, அர்ஜுன் சம்பத், பாமக பிரமுகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை? என நெல்லை கண்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ஜெய் பீம். 90 களில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட, இந்த திரைப்படம், நவம்பர் 2 ஆம் தேதி ஒடிடி தளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால் படத்தில் வன்னியர் சமூகம் இழிவுப்படுத்தப்பட்டதாக கூறி வன்னியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதற்கு நடிகர் சூர்யா மற்றும் படத்தின் இயக்குனர் ஞானவேல் ஆகியோர் விளக்கமளித்த நிலையிலும், வன்னியர் சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
முன்னதாக, இப்பட விவகாரம் தொடர்பாக, நடிகர் சூர்யாவை தாக்குபவர்களுக்கு 1 லட்சம் பரிசு என பாமக நிர்வாகி ஒருவர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பேச்சாளர் நெல்லைகண்ணன் ஜெய் பீம் படம் மற்றும் திரைத்துறைக்கு ஆதரவாகவும், சூர்யாவை தாக்கினால் பரிசு என்று கூறியவர் மீது வழக்கு பதிவு செய்தால் மட்டும் போதுமான என கேள்வி எழுப்பியும், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக நெல்லைக்கண்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மிகச் சிறப்பாக ஆட்சி செய்கின்ற தமிழக முதல்வர் அவர்களுக்கு வணங்கி மகிழ்கின்றேன். நான் எழுதும் கடிதம் தங்கள் கையில் கிடைக்கின்றதோ இல்லையோ என்ற அய்யத்தில் எழுதுகின்றேன். ஒரு திரைக்கலைஞனை அடித்தால் ஒரு இலட்சம் தருகின்றேன் என்று ஒரு அரசியல் இயக்கத்தின் மாவட்டத்தலைவர் கூறினால் அவர் மீது வழக்கு மட்டும் பதிவு செய்தல் சரியா?. அதற்கு முன்னரே மதத்தின் பெயரால் இயக்கம் நடத்துகின்ற ஒருவர் நடிகர் விஜய் சேதுபதியை அடித்தால் ஆயிரம் ரூபாய் தருவேன் என்ற போதே அவரைச் சிறையில் தள்ளியிருப்பின் இந்த அநாகரீகங்கள் தங்களின் சிறப்பான ஆட்சியில் அரங்கேறி இருக்க வாய்ப்பேயில்லை.