அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் திங்கள் கிழமை அன்று ஆஜரானார் முன்னாள் தமிழக அமைச்சர் சி. விஜயபாஸ்கர். மோசடி வழக்கு ஒன்று தொடர்பாக அமலாக்கத்துறையினர் அவருக்கு சம்மன் அனுப்பிய நிலையில் நேரில் ஆஜரானார் அவர். 2016ம் ஆண்டு கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலியில் பதிவு செய்யப்பட்ட பணமோசடி வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அவருக்கு சம்மன் வழங்கப்பட்டது.
கேரளாவில் உள்ள பிரபல நகைக் கடை ஒன்றில் 2.5 கோடிக்கு நகைகளை வாங்கிவிட்டு பணத்தை திருப்பி செலுத்தவில்லை என்று ஆலப்புழாவைச் சேர்ந்த ஷர்மிளா என்ற பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி நகைகளைப் பெற்றுக் கொண்டதாக காவல்துறை விசாரணையில் கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண் முறையாக, வாங்கிய நகைகளுக்கு பணம் செலுத்தவில்லை.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது ஷர்மிளா, தான் அந்த நிறுவனத்தை ஏமாற்றவில்லை என்றும் மாறாக தன்னுடைய பணிக்கு தரப்பட்ட கமிஷன் இது என்றும் கூறியுள்ளார். அந்த நகைக் கடையில் இருந்து அதிக அளவு தங்கத்தை விஜயபாஸ்கரை வாங்க வைத்ததாகவும் அதற்கான கமிஷன் தான் இந்த நகை என்றும் ஷர்மிளா கூறியுள்ளார். இது தொடர்பான விசாரணையில் முன்னாள் அமைச்சரின் வாக்குமூலத்தை பதிவு செய்ய சம்மன் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தன்னுடைய செய்தியில் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இது தொடர்பாக சென்னையில் முன்னாள் அமைச்சரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கமிஷனே இவ்வளவு அதிகம் இருந்தால் வாங்கப்பட்டிருக்கும் தங்கத்தின் மதிப்பு நிச்சயமாக மிகவும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுவதால் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு வழக்குகளை சி. விஜயபாஸ்கர் எதிர்கொண்டு வருகின்ற நிலையில் விஜயபாஸ்கர், ஷர்மிளா மற்றும் தங்க நகைக்கடை கொடுத்துள்ள வாக்குமூலங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளா ராஜீவ் என்பவர், திருநெல்வேலியில் என் மீது ஏற்கனவே ஒரு புகாரில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். எனது வழக்கறிஞர் மூலம் அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன். குற்றப் பின்னணி கொண்ட ஷர்மிளா தொடர்பான சம்மன் அடிப்படையில் நான் அமலாக்கத்துறை முன்பு ஆஜரானேன் என்று அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/cheating-case-enforcement-directorate-quizzes-c-vijayabaskar-376216/