தமிழ்நாட்டில் கடந்த வாரம் கனமழை கொட்டி தீர்த்ததால், பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது, மழை குறைந்துள்ளதால், குடியிருப்புக்குள் புகுந்த மழை நீரை, அப்புறப்படுத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும், பல இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி
இந்நிலையில், தென் கிழக்கு வங்க கடற்பகுதியில் (3.1 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோர பகுதி வரை நீடிப்பதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், தென் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 24: ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி
வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, இலங்கை மற்றும் தென் தமிழகத்தை நோக்கி நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக நவம்பர் 25,26 இல் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகப்பட்ச வெப்பநிலை 30 மற்ரும் குறைந்தப்பட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகும்.
மீனவர்களுக்கு எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-weather-update-4-district-heavy-rain-alert-today-372942/