செவ்வாய், 16 நவம்பர், 2021

சர்வாதிகார ஆட்சி… அப்போ நாடாளுமன்றம் எதற்கு? கொதித்தெழுந்த எதிர்க்கட்சிகள்

 

சிபிஐ இயக்குநர் மற்றும் அமலாக்கத்துறை இயக்குநரின் பதவிக்காலம் தற்போது 2 ஆண்டுகளாக உள்ளது. இதனை 5 ஆண்டுகளாக நீட்டிக்கும் அவசர சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், பதவி நீட்டிப்புக்கான அவசர சட்டத்தை வெளியிடும் மத்திய அரசின் உள்நோக்கம் குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

சிபிஐ இயக்குநரை தேர்ந்தெடுக்கும் குழுவில் எதிர்க்கட்சி உறுப்பினராக உள்ள மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, இந்த அவசர சட்டம் “அரசாங்கத்தின் சர்வாதிகார அணுகுமுறைக்கு” மற்றொரு “உதாரணம்” என்றார்.

சிபிஐ இயக்குநரைத் தேர்ந்தெடுக்கும் மூன்று பேர் கொண்ட குழு, பிரதமர் தலைமையில், இந்திய தலைமை நீதிபதி அல்லது அவரால் பரிந்துரைக்கப்படும் நீதிபதியை உள்ளடக்கியது.

இதுகுறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய ரஞ்சன் சவுத்ரி, ” அவசர சட்டத்தை கொண்டு வந்தவர்களுக்கு, ஜனநாயகத்தின் மீது எந்த மரியாதையும் இல்லை. யாரையும் கலந்தாலோசிப்பதில்லை. அவர்களிடம் அதிகாரம் உள்ளதாக சொல்லி, எதை வேண்டுமானாலும் செய்கிறார்கள். அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்து பின்னர் அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவார்கள்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் நிச்சயம் கேள்வி எழுப்புவோம். ஆனால், எங்களால் அங்கு ஆதிக்கம் செலுத்த இயலாது. அரசாங்கத்திற்கு ஆதரவாக நிறையப் பேர் உள்ளனர். தற்போது எங்களுக்கு இருக்கும் ஒரே தீர்வு நீதிமன்றம் தான். என்ன நடக்கிறது என்பதை நீதித்துறை கவனத்தில் கொண்டு, , அதிகாரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இவ்விவகாரம் குறித்து காங்கிரஸ் நீதிமன்றத்தை அணுகுமா என்ற கேள்விக்கு, சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் நிச்சயம் செய்வார்கள். அவர்கள் ஜனநாயகத்தையும், நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் அவமதிக்கிறார்கள். சிபிஐ, அமலாக்கத் துறைத் தலைவர்களின் பதவி காலத்தை நீடிப்பதன் மூலம், தங்களுக்கு ஏற்றார்போல் நடந்துகொள்வார்கள் என கருதுகிறார்கள்

நாளை மோடிஜியின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளுக்கு அதிகரிக்க ஒரு அவசரச் சட்டம் அல்லது மசோதா கொண்டு வருவார்கள். அப்படி ஒன்றும் நடைபெறலாம். 2024க்குள், ஜி ஜின்பிங்கிடம் இருந்து கற்றுக்கொண்டேன் எனக் கூறி, நாட்டின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பதவிக் காலத்தை அதிகரித்துக் கொள்கிறேன் என மோடிஜி கூறலாம். அவர்களுக்கு அதிக எண்ணிக்கையில் ஆதரவு இருக்கின்றனர்.

நாடாளுமன்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ஆனந்த் சர்மா பேசுகையில், ” நாடாளுமன்ற நடைமுறைகள், கொள்கைகளை அரசு மீண்டும் மீறி, அவசரச் சட்டம் மூலம் ஆட்சி செய்கிறது. நாடாளுமன்றம் தொடங்கவிருக்கும் சமயத்தில், அவர்கள் காத்திருக்கலாம்.

இத்தகைய முடிவுகளும் நடவடிக்கைகளும், நாடாளுமன்ற அமைப்புக்கு மட்டுமன்றி உச்ச நீதிமன்றத்துக்கும் அவமரியாதையைக் காட்டுகிறது. அரசின் செயல்பாடுகளை உச்ச நீதிமன்றம்தான் கவனிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில், ” நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வரும் 29ஆம் தேதி தொடங்குகிறது. தன் மீதான ஆய்வை தடுக்கும் நோக்கில், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்க மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை அவசரச் சட்டங்களை வெளியிட்டது. இத்தகைய அவசர சட்டம் எவற்றையோ மறைப்பது போல் உள்ளது” என்றார்.

RJD தலைவர் மனோஜ் குமார் ஜா கூறுகையில், “அரசின் செயல்பாடுகள் அனைவரையும் கவலையடையச் செய்கிறது. இன்னும் 15 நாட்களில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்த அவசரச் சட்டத்தை அவர்கள் கொண்டு வந்துள்ளனர். அவர்கள் அனைத்து நிறுவன கட்டமைப்பையும், விதிமுறைகளையும் அழிக்கின்றனர். நாடாளுமன்றத்தை புறக்கணித்து இத்தகைய முடிவுகள் வரலாற்றில் இடம்பெறக்கூடாது. இது நாடாளுமன்றத்தின் வாயிலாக தான் அமலுக்கு வர வேண்டும். இல்லையெனில், பாராளுமன்றத்திற்கு என்ன முக்கியத்தவம் உள்ளது.

ஜனநாயகம் மற்றும் ஜனநாயக செயல்பாடு பற்றிய கருத்தை அருங்காட்சியகமாக்குவதற்காகத் தான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை உருவாக்குகிறீர்களா” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுமட்டுமின்றி, பல தேசிய கட்சி தலைவர்கள் இவ்விவகாரம் குறித்து தங்களது அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். அரசு தன்னிச்சையாக முடிவெடுக்கும் போது, நாடாளுமன்றத்தின் அவசியம் என்ன என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

source https://tamil.indianexpress.com/india/ordinance-was-another-example-of-the-dictatorial-attitude-of-the-government-says-opposition-369385/