சனி, 27 நவம்பர், 2021

அதானி காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை ரத்து செய்ய வேண்டும் – பொதுமக்களின் தொடர் கோரிக்கை

 Adani port expansion : முந்தைய அரசு அறிவித்திருக்கும் பொன்னேரி தொழிற்சாலை நகர் பகுதி திட்டத்திற்கு எதிராகவும், ஈர்நிலங்களின் மேல் அமைய இருக்கும் அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிராகவும், தமிழ்நாடு பாலிமர் பார்க் திட்டத்திற்கு எதிராகவும் எண்ணூர் கழிவெளி பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த சீனிவாசன் மற்றும் உறுப்பினர்கள் நேற்று செய்தியாளர் சந்திப்பில் கடந்துகொண்டு தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

புலிகாட் ஏரிக்கும் சென்னைக்கும் இடைப்பட்ட கடலோரப் பகுதியில் அதானி துறைமுகம் மூலம் காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய முன்மொழியப்பட்டதற்கு அப்பகுதியில் எதிர்ப்பு கிளம்பியது. 2018 ஆம் ஆண்டில், அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் லிமிடெட், காட்டுப்பள்ளி துறைமுகத்தின் 330 ஏக்கரை லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனத்திடம் இருந்து வாங்கியது. அதன்பிறகு அதானி குழுமம் விரைவில் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டத்தைத் தொடங்கியது.

பிடா-விற்காக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலத்தில் 1734 ஏக்கர் ஈர்நிலம் உள்ளடக்கம். அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு உப்பளங்கள் உள்ளிட்ட 3200 ஏக்கர் ஈர்நிலம் தொழில்மயமாக்களுக்காக கோரப்பட்டுள்ளது. கொசஸ்தலையாற்றின் 265 ஏக்கர் கழிவெளிப் பகுதியில் பாலிமர் பார்க் தொழிற்சாலை கட்டப்பட்டு வருகிறது.

இது மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும், இப்பகுதியின் பல்லுயிர் பெருக்கத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்பதாலும், எண்ணூர் அருகே உயர் அரிப்பு பகுதியில் பல்வேறு சுற்றுச்சூழல் விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறியதாலும், இத்திட்டத்தை எதிர்த்து அப்பகுதி மீனவர்கள், துணை வணிகத் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 2018 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, எண்ணூர் கழிவெளி பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த சீனிவாசன் கூறியதாவது:

“வள்ளூர் அனல் மின்நிலையம், காமராஜர் துறைமுகத்திற்கான சாலை, செட்டிநாடு நிலக்கரி கிடங்கு, பிபிசில், எச்பிசிஎல் எண்ணெய் முனையங்கள் ஆகியவை ஏற்கனவே 2000 ஏக்கர் ஈர்நிலத்தை ஆக்கிரமித்துள்ளன. கிட்டத்தட்ட 1000 ஏக்கருக்கு மேலான ஆற்றுபகுதியிலும் கழிவெளியிலும் நிலக்கரி சாம்பல் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளின் காரணமாக, பொன்னேரி தாலுக்காவிலும், வட சென்னையிலும் வாழும் 10 லட்சம் மக்கள் வெள்ள பாதிப்புகளுக்கு ஆளாவார்கள்.”

அனல் மின்நிலையங்கள், ஓரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, நிலக்கரி சேமிப்பு கிடங்குகள், பெட்ரோகெமிக்கல் ஆலைகளால் மிக அதிக அளவுக்கு படிம எரிபொருள் தொழில் கட்டமைப்புகள் நிறைந்துள்ள பகுதியாகவும், புவி வெப்ப மயத்துக்குக் காரணமான பசுமைக் குடில் வாயுக்களை மிக அதிக அளவுக்குத் தென் இந்தியாவில் உற்பத்தி செய்யும் பகுதியாக எண்ணூர் மணலி மாறியுள்ளது. காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் வெள்ளத்திலிருந்தும், புயல்களிலிருந்தும், கடல்மட்ட உயர்விலிருந்தும் பெரும் நகரத்தை காப்பாற்றும் இயற்கை அரணாக இருக்கின்ற இந்த கடல்சார் ஈர் நிலங்கள், மாசுப்படுத்தும் ஆலைகளுக்காக வழங்கப்பட்டுள்ளன.

இந்த நதியை நம்பித்தான் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டறோரின் வாழ்க்கை உள்ளது. இந்த நநிதான் எங்கள் வாழ்க்கையின் ஆதாரம். வெள்ளத்தை எதிர்கொள்ளவும் வறட்சி இல்லாது போகவும் இந்த நதி முக்கியம். எனவே தான் இந்த நதியை காப்பதற்காக நாங்கள் போராடி வருகிறோம். மாநில ஈர்நில இயக்கம் திட்டத்திற்கான அரசாணை ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த இயக்கத் திட்டத்திற்கு ரூ.150 கோடி ஒதுக்கியுள்ளது. அதனை நாங்கள் வரவேற்கிறோம். எண்ணூர் பழவேற்காடு ஈர்நிலப் பகுதிகளை இந்த திட்டத்தின் கீழ் செய்து இந்த இயக்கத்தின் முயற்சியை துவக்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறோம்.

மேலும், சென்னையின் ஆரணியாறு, கொசத்தலையாறு வடிநிலப்பகுதிகளில் வெள்ளம் தேங்கி சுட்டி காட்டிய மீனவர்கள் மற்றும் எண்ணூர் கழிவெளி பாதுகாப்பு இயக்கத்தினர் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாநில ஈர்நில இயக்க திட்டத்தின் கீழ் எண்ணூர், பழவேற்காடு ஈர்நிலங்களை அறிவித்து மீட்டெடுக்கவும், பாதுகாக்கவும் வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனை செய்யத் தவறினால் வட சென்னை, மணலி, பொன்னேரி தாலுக்கா அதி தீவிர வெள்ளம் மற்றும் வாட்டி வதைக்கும் வறட்சியால் பாதிக்கப்படும் என கூறினர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/adani-port-expansion-should-be-stopped-says-pulicat-people-374683/