Northeast Monsoon flood alerts : வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வடக்கு தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரையோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னைக்கு இன்று சிவப்பு நிற அலெர்ட் கொடுக்கப்பட்ட நிலையில் மழை மற்றும் இன்றைய வானிலை தொடர்பான அனைத்து முக்கிய அப்டேட்களும் இங்கே…
வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி
காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடையாது என்று எதிர்பார்த்த நிலையில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
சென்னை மழை
சென்னையின் பட்டினபாக்கம், மெரினா, மயிலாப்பூர், மந்தைவெளி, ஈக்காட்டுதாங்கல், அசோக்நகர், சைதாப்பேட்டை, ராயப்பேட்டை பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
பவானிசாகர் அணையில் இருந்து நீர் வெளியேற்றம்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 17.11.2021 அன்று இரவு 10.00 மணிக்கு 104.01 அடியை எட்டியது. வடகிழக்கு பருவமழையின் காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருக்கும் என்பதால் இன்று காலை 06.00 மணி முதல் பவானி சாகர் அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பவானி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி சின்னமாள்புரம் குளத்தில் இருந்து நீர் வெளியேற்றம்
திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டம், வள்ளியூா் குறுவட்டம், ஆனைகுளம் கிராமத்தில் உள்ள சின்னமாள்புரம் குளம் நிறைந்த நிலையில் அங்கிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-rains-northeast-monsoon-flood-alerts-dams-status-370842/