சனி, 20 நவம்பர், 2021

தைப் பொங்கலுக்கு பிறகு நேரடி செமஸ்டர் தேர்வு – உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

 அனைத்து கல்லூரிகளுக்கும் செமஸ்டர் தேர்வுகள் ஜனவரி 20ஆம் தேதி முதல் நேரடி தேர்வாக நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். தைப் பொங்கலுக்கு பிறகு, பொறியியல், கலை அறிவியல் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளுக்கும் நேரடி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சம் காரணமாக கடந்த ஆண்டு அனைத்து கல்லூரி தேர்வுகளும் ஆன்லைன் முறையில் நடைபெற்றது. அனைத்து பொறியியல், கலை அறிவியல் கல்லூரி மாணவர்களும் ஆன்லைன் முறையில் தேர்வு எழுதினார்கள். இதனைத் தொடர்ந்து, நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகள் நேரடி வகுப்புகள் மிகவும் தாமதமாகவே சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அனைத்து பொறியியல், கலை அறிவியல் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் டிசம்பர் மாதம் நேரடி தேர்வுமுறையில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியானது. கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் சரியாக நடைபெறாத சூழ்நிலையில், டிசம்பர் மாதத்தில் நேரடி தேர்வு முறையில் நடைபெறும் என்ற அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், இந்த ஆண்டும் செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் முறையில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளில் மாணவர்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 400க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மாணவர்களின் கோரிக்கையில் நியாயம் உள்ளதாகவும் செமஸ்டர் தேர்வுகளை நேரடி தேர்வாக நடத்துவதற்கு மாணவர்களுக்கு மேலும் கூடுதலாக கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கல்வியாளர்களும் அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து, ஜனவரி 20-க்கு பிறகு உயர்கல்வி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெள்ளிக்கிழமை கூறினார்.

இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஜனவரி 20-க்கு பிறகு உயர்கல்வி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும். அனைத்து கல்லூரிகளுக்கும் செமஸ்டர் தேர்வுகள் நேரடி தேர்வாக (ஆஃப்லைன்) நடைபெறும். மாணவர்கள் தேர்வுக்கு ஒரு மாதம் அவகாசம் கோரிய நிலையிர் 2 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று கூறினார்.

இதன் மூலம், அனைத்து கல்லூரிகளுக்கும் செமஸ்டர் தேர்வுகள் ஜனவரி 20ஆம் தேதி முதல் நேரடி தேர்வாக நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். தைப் பொங்கலுக்கு பிறகு, பொறியியல், கலை அறிவியல் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளுக்கும் நேரடி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/all-college-semester-exams-will-be-conduct-in-offline-after-pongal-festival-371754/