28 11 2021 : நவம்பர் 29-30 ஆகிய தேதிகளில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2021-ம் ஆண்டின் பருவமழைக்கு பிந்தைய காலத்தில் வங்காள விரி குடாவில் உருவாகும் முதல் புயல் இன்னும் சில நாட்களில் தெற்கு அந்தமான் கடலில் உருவாகி டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியாவின் கிழக்கு கடற்கரையைத் தாக்கும் என வானிலை ஆய்வு மாதிரிகள் தெரிவிக்கின்றன.
“இந்த குறைந்த அழுத்த அமைப்பு ஒருவித சூறாவளி புயலாகத் தீவிரமடையும் என்று வானிலை மாதிரிகள் காட்டுகின்றன. ஆனால், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும்” என்று இந்திய வாளினை ஆய்வு மைய தலைவர் மிருத்யுஞ்சய் மொகபத்ரா கூறினார். இந்த ஆண்டு, பொதுவாகப் புயல்களின் உச்ச மாதங்களான அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வங்கக்கடலில் எந்த புயலும் உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அப்பகுதியில் தென்மேற்கு பருவமழை இன்னும் தீவிரமாக இருந்தபோது, கடந்த செப்டம்பர் பிற்பகுதியில் குலாப் புயல் வளைகுடாவில் கடைசியாக வீசியது. குலாப் சூறாவளி செப்டம்பர் 26 அன்று வடக்கு ஆந்திரப் பிரதேசத்தில் கரையைக் கடந்தது. பிறகு, அந்த புயல் அரபிக்கடலில் நுழைந்து கடுமையான சூறாவளியாக, ஷாஹீன் என தீவிரமடைந்தது.
தற்போதைய நிலவரப்படி, ஐரோப்பிய வானிலை மாதிரி (ECMWF), புயல் வடக்கு கடலோர ஆந்திரப் பிரதேசத்தில் கரையைக் கடக்கும் என்று கணித்துள்ளது. இருப்பினும், அமெரிக்க ஜிஎஃப்எஸ் மாதிரியானது, வட ஆந்திரப் பிரதேசத்திற்கு அருகே கடலில் மீண்டும் புயல் திரும்பி வங்காளத்தை நோக்கி நகரும் என்று கணித்துள்ளது.
“இருப்பினும், ஆந்திரா, ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் வங்காளம் ஆகிய மாநிலங்களில் டிசம்பர் முதல் வாரத்தில் நல்ல மழை பெய்யக்கூடும் என்று இந்த மாதிரிகள் குறிக்கின்றன” என்று மொஹபத்ரா கூறினார்.
டிசம்பர் 1 முதல் மேற்குக் கடற்கரையில், குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் ஈரமான வானிலை இருக்கும். சில மாதிரிகள் தெற்கு குஜராத்தை நோக்கிச் செல்லும் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று கணித்துள்ளது.
source https://tamil.indianexpress.com/india/cyclone-over-bay-of-bengal-to-hit-next-week-tamil-news-375472/