கனமழை காரணமாக இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கனமழை காரணமாக காஞ்சி, செங்கல்பட்டு, நெல்லை, தேனி, கடலூர், ராமநாதபுரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம். மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, திண்டுக்கல் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கம்
வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலை உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெற்கு அந்தமான் கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து மத்திய கிழக்கு அரபிக்கடலில் டிசம்பர் 1ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை
சென்னையைப் பொறுத்தமட்டில் வானம் மேகத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கான வாய்ப்பு உள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு
கடலூரில் அதிகபட்சமாக 17 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரியின் சிவலோகம் பகுதியில் 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சித்தாறு பகுதியில் 13 செ.மீ மழையும், திருவள்ளூர் மாவட்டத்தின் உத்துக்கோட்டையில் 12 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. கடலூரின் பரங்கிப்பேட்டை மற்றும் குமரியின் தக்கலை போன்ற பகுதிகளில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-weather-chennai-rains-school-leave-new-depression-in-bay-of-bengal-376164/