Omicron / ஒமிக்ரா 29 11 2021 இன்றுவரை, ஒமிக்ரானுடன் தொடர்புடைய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இருப்பினும், தடுப்பூசிகள் மற்றும் முந்தைய நோய்த்தொற்றுகளால் உருவான நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்கும் ஓமிக்ரானின் திறனை மதிப்பிடுவதற்கு கூடுதல் ஆராய்ச்சி தேவை என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
பெரிய அளவில் மாற்றமடைந்துள்ள ஓமிக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாடு சர்வதேச அளவில் பரவ வாய்ப்புள்ளது. சில இடங்களில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு இந்த தொற்றுநோய் பெரிய அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
தடுப்பூசிகள் மற்றும் முந்தைய நோய்த்தொற்றுகளால் உருவான நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிரான பாதுகாப்பைத் தவிர்க்கும் அதன் திறனை மதிப்பிடுவதற்கு கூடுதல் ஆராய்ச்சி தேவைப்பட்டாலும், ஒமிக்ரான் உடன் தொடர்புடைய இறப்புகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை.
கடந்த வாரம் முதல் அறிக்கையில், பரவலாக தொற்றுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதை எதிர்பார்த்து, உலக சுகாதார நிறுவனம் அதன் 194 உறுப்பு நாடுகளின் உயர் முன்னுரிமை குழுக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்துவதை விரைவுபடுத்தவும், சுகாதாரப் பணிகளை மேலும் தொடரவும் திட்டங்களை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தியது.
“ஒமிக்ரான் முன்னோடியில்லாத எண்ணிக்கையில் திடீரென அதிக பிறழ்வுகளைக் கொண்டுள்ளது, அவற்றில் சில தொற்றுநோய்களின் பாதையில் மிக அதிகமான தாக்கத்தை செலுத்துகிறது என்று உலக சுகாதார நிறுவனம் கூறியது.
“இந்த புதிய மாறுபாடு தொடர்பான ஒட்டுமொத்த உலகளாவிய அபாயம்… மிக அதிகமாக மதிப்பிடப்படுகிறது.” என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார தலைமை இயக்குநர், டெட்ராஸ் ஆதானோம் கெப்ரேயசஸ், சுகாதார அமைச்சர்களின் கூட்டத்தின் தொடக்கத்தில் எச்சரிக்கையை எழுப்பினார். இது எதிர்காலத்தில் தொற்றுநோய்களைத் தடுப்பதற்கான சர்வதேச ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“மிகவும் மாறுபாடு அடைந்த ஒமிக்ரான் மாறுபாட்டின் தோற்றம் நமது நிலைமை எவ்வளவு அபாயமானதாக உள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று டெட்ரோஸ் கூறினார். “தொற்றுநோய்கள் தொடர்பாக உலகிற்கு ஏன் ஒரு புதிய ஒப்பந்தம் தேவை என்பதை ஒமிக்ரான் நிரூபிக்கிறது: நம்முடைய தற்போதைய அமைப்பு, தவிர்க்க முடியாமல் தங்கள் நாடுகளில் காணப்படும் நிலைமை குறித்து மற்றவர்களுக்கு எச்சரிக்கை செய்வதிலிருந்து நாடுகளைத் தடுக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
மே, 2024-க்குள் எதிர்பார்க்கப்படும் உலகளாவிய புதிய ஒப்பந்தம், தொற்றுநோய் பற்றிய தரவுகளைப் பகிர்ந்துகொள்வது மற்றும் வளர்ந்து வரும் வைரஸ்களின் மரபணு வரிசைகள் மற்றும் ஆராய்ச்சியிலிருந்து பெறப்பட்ட தடுப்பூசிகள் போன்ற விவகாரங்களை உள்ளடக்கியிருக்கும்.
பெருகும் கோரிக்கைகள்
ஒமிக்ரான் முதன்முதலில் நவம்பர் 24ம் தேதி தென்னாப்பிரிக்காவில் இருந்து அறிவிக்கப்பட்டது. அங்கு தொற்று எண்ணிக்கை திடீரென உயர்ந்தன.
இந்த ஒமிக்ரான் 12க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. அவற்றில் பல நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்து வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை என்று கதவை மூடிக்கொள்ள முயற்சித்தன. திங்கள்கிழமை ஜப்பான், இஸ்ரேலுடன் இணைந்து வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை என்று எல்லைகளை மூடுவதாகத் தெரிவித்தன.
மேலும் ஆலோசனை நிலுவையில் உள்ள நிலையில், உலக நாடுகள் “சர்வதேச பயண நடவடிக்கைகளை சரியான நேரத்தில் சரிசெய்ய ஆபத்து அடிப்படையிலான அணுகுமுறையை பயன்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் மீண்டும் வலியுறுத்தியது. அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு என்பது அதிக நோயாளிகள் மற்றும் இறப்பு விகிதங்களுக்கு வழிவகுக்கும். பாதிக்கப்படக்கூடிய மக்கள் மீதான தாக்கம் கணிசமானதாக இருக்கும். குறிப்பாக குறைந்த தடுப்பூசி பாதுகாப்பு உள்ள நாடுகளில் அது மேலும் அதிகமாக இருக்கும்” என்று கூறியுள்ளது.
இதனிடையே, தடுப்பூசி போடப்பட்ட நபர்களில், “சிறிய மற்றும் கணிக்கக்கூடிய விகிதத்தில் இருந்தாலும், COVID-19 தொற்று எண்ணிக்கைகளும் தொற்று பரவலும் எதிர்பார்க்கப்படுகின்றன…”
ஒட்டுமொத்தமாக, நோய் எதிர்ப்பில் இருந்து தப்பிக்கும் ஒமிக்ரானின் திறன் அளவுகளில் கணிசமான நிச்சயமற்ற தன்மைகள் உள்ளன. மேலும், வரும் வாரங்களில் கூடுதல் தரவுகள் எதிர்பார்க்கப்படுகிறது.
source https://tamil.indianexpress.com/india/who-says-omicron-poses-very-high-global-risk-world-must-prepare-376104/