திங்கள், 29 நவம்பர், 2021

மோசமான செயல்திறன் தரவரிசை; 6-12 ஆம் வகுப்புகளுக்கு வினா வங்கி வெளியிட தமிழக அரசு முடிவு

 2021 ஆம் ஆண்டுக்கான செயல்திறன் தரவரிசைக் குறியீடு (PGI) வெளியிட்ட அறிக்கையில், கற்றல் முடிவுகள் மற்றும் தரத்தில் தமிழகத்தின் மோசமான செயல்திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வினா தொகுப்புகளை (Questions Bank) வெளியிட அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

பள்ளிக் கல்வியில் முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருந்தாலும், செயல்திறன் தரவரிசைக் குறியீட்டில் தமிழகத்தின் செயல்திறன் ஒட்டுமொத்தக் கல்வி முறையை மேம்படுத்தும் நோக்கங்களில் குறிப்பிடத்தக்க சவாலாக உள்ளது. கல்வி நிலை ஆண்டறிக்கையின் (Annual Status of Education Report) முதல் கட்ட தகவலின்படி, மாநிலத்தில் 8 ஆம் வகுப்பு படிக்கும் நான்கில் ஒரு மாணவரால் இரண்டாம் வகுப்பு பாடங்களை படிக்க முடியவில்லை. 8 ஆம் வகுப்பு மாணவர்களில் 50 சதவீதம் பேரால் மட்டுமே வகுத்தல் கணக்குகளை புரிந்து கொள்ள முடிந்தது, என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் சுமார் 1.2 கோடி மாணவர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் புதிய திட்டமான வினா வங்கி திட்டத்தை பற்றி விளக்கிய அதிகாரி, மதிப்பீட்டு கேள்விகள் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டிலும் வழங்கப்படும். கேள்விகள் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (SCERT) பாடத்திட்டத்துடன் இணைக்கப்படும், என்று அந்த அதிகாரி கூறினார்.

வினா வங்கியானது, உயர்நிலைப் பள்ளி மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்றுவிப்பதை நோக்கமாகக் கொண்டதாக இல்லை என்பதை உறுதிப்படுத்த, தொழில்நுட்பக் குழுவால் வினா வங்கி மதிப்பீடு செய்யப்படும், என்று அந்த அதிகாரி கூறினார்.

கேள்விகள் எளிதான, நடுத்தர மற்றும் கடினமான வகைகளாக அமைக்கப்படும். 6 ஆம் வகுப்புக்கு அனைத்து பாடங்களையும் உள்ளடக்கிய 500 க்கும் மேற்பட்ட கேள்விகள் இருக்கும். 7 ஆம் வகுப்பிற்கு 800 க்கும் மேற்பட்ட கேள்விகள் மற்றும் 8 ஆம் வகுப்புக்கு 600க்கும் மேற்பட்ட கேள்விகள் இருக்கும். 9 மற்றும் 10 வகுப்புகள், ஒவ்வொன்றுக்கும் தலா 1,000க்கும் மேல் கேள்விகள் இருக்கும். 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அறிவியல் மற்றும் வணிகவியல் மாணவர்களுக்கு தலா 7,000 கேள்விகள் கேட்கப்படும்.

அனைத்து கேள்விகளுக்கும் பதில்கள் வழங்கப்படும். கணக்குகளுக்கு படிகளுடன் தீர்வு கிடைக்கும் அதே வேளையில், மற்ற வினாக்களுக்கு விளக்க பத்திகள் மற்றும் புகைப்படங்கள் வழங்கப்படும். மேலும், வினா வங்கி டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பள்ளிகளில் கணினிகள் மூலம் மாணவர்களுக்கு கிடைக்கச் செய்யப்படும். அரசாங்கத்தால் மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச மடிக்கணினிகளிலும் வினா வங்கி பதிவேற்றம் செய்யப்படும், என்று அந்த அதிகாரி கூறினார்.

source https://tamil.indianexpress.com/education-jobs/tn-govt-decide-to-release-questions-bank-for-classes-6-12-375569/