செவ்வாய், 30 நவம்பர், 2021

ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தில் 12 மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை

  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமமாக தமிழகம் புதுச்சேரி மற்றும் ஆந்திராவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், அதிகரித்து வரும் மழை நீரால் ஏராமான கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலை உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தெற்கு அந்தமான் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து மத்திய கிழக்கு அரபிக்கடலில் டிசம்பர் 1ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது..

இதில் நாளை அந்தமான் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்தியப் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மதுரை, திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  இதில் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

காஞ்சி, செங்கல்பட்டு, நெல்லை, தேனி, கடலூர், ராமநாதபுரம், மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, திருவள்ளூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-rain-low-pressure-from-andaman-and-bay-of-bengal-376117/