28 11 2021
இந்தியாவில் இருந்து டிசம்பர் 15-ம் தேதி முதல் வெளிநாடுகளுக்குப் பயணிகள் விமானசேவை தொடங்கும் என மத்திய விமான போக்குவரத்துறை அறிவித்தது. ஆனால், அடுத்த நாளே சர்வதேச விமான சேவையை தொடங்குவது குறித்து மறுபரிசீலனை செய்ய மூத்த அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
ஏனென்றால், தென் ஆப்பிரிக்காவில் தென்பட்ட புதிய வகை ஒமைக்ரான் கொரோனா, பிரிட்டன், இத்தாலி, ஜெர்மனி நாடுகளுக்கு பரவ தொடங்கியுள்ளது. பல்வேறு நாடுகள், அவசர அவசரமாக ஆப்பிரிக்கா நாடுகளுடனான விமான பயணத்தில் கட்டுப்பாடை விதித்துள்ளன.
சர்வதேச விமான சேவை
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி முதல் சர்வதேச போக்குவரத்தை மத்திய அரசு நிறுத்தியது. இந்நிலையில், சுமார் 21 மாத தடைக்கு பிறகு, இந்தியாவில் இருந்து டிசம்பர் 15-ம் தேதி முதல் வெளிநாடுகளுக்கு பயணிகள் விமானசேவை தொடங்கும் என மத்திய விமான போக்குவரத்துறை அறிவித்தது.வெளிநாடுகளை 3 வகையாக பிரித்து அதற்கேற்ப கட்டுப்பாடு விதிக்கப்பட்டு விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
விமான போக்குவரத்து துறை கூற்றுப்படி, தென்னாப்பிரிக்கா, பிரேசில், பங்களாதேஷ், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஏர் பபுள் விதிமுறை பின்பற்றப்பட்டால், 75 சதவிகித பயணிகளுடன் விமானம் இயக்கப்படுகிறது. பாதிப்பு இல்லாத மற்ற நாடுகளுக்கு, 100 சதவிகிதத்துடன் விமானத்தை இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
முடிவு மறுபரிசிலீனை
சனிக்கிழமையன்று, பிரதமர் நரேந்திர மோடி அரசின் உயர் அதிகாரிகளுடன் இரண்டு மணி நேரம் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது, சுகாதாரத் துறை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், தடுப்பூசி பணி குறித்தும், ஒமைக்ரான் கொரோனா வைரஸ் குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஏனென்றால், அந்த வைரஸ் மாதிரியை கவலைக்குரிய மாதிரி என உலக சுகாதார அமைப்பு பட்டியலிட்டுள்ளது.
இந்த கூட்டத்தின் போது, பிரதமர் மோடி சர்வசேத விமான பயணங்களுக்கு வழங்கப்பட்ட முழு அனுமதி குறித்து மறு பரிசிலீனை செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். விமான பயண தளர்வுகள் மட்டுமின்றி இந்தியா விசா கட்டுப்பாடுகளையும் தளர்த்தியது. அக்டோபர் 15 முதல் சார்டட் விமானங்களுக்கும், நவம்பர் 15 முதல் பிற விமானங்களுக்கும் சுற்றுலா விசா வழங்கும் பணியை தொடங்கவுள்ளது.
மற்ற நாடுகளிலும் கட்டுப்பாடா?
ஒமைக்ரான் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகள் பயண கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. சவுத் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, போட்ஸ்வானா போன்ற நாடுகளின் பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/explained/review-of-easing-international-flights-amid-emergence-of-new-covid-variant-375438/