வியாழன், 18 நவம்பர், 2021

இலவச வீட்டு மனை, தையல் இயந்திரம் வேண்டுமா? அரசு நிபந்தனை தளர்வு

 

இலவச தையல் இயந்திரம், இலவச பித்தளை தேய்ப்பு பெட்டி மற்றும் இலவச வீட்டுமனை உள்பட அரசின் நல உதவிகளை பெறுவதற்கான பயனாளிகளின் வருமான வரம்பு, 72 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக விலையில்லா வீட்டுமனைகள், தையல் இயந்திரங்கள் மற்றும் சலவை பெட்டிகள் ஆகியவற்றை பெறுவதற்கான பயனாளிகளின் ஆண்டு வருமான உச்ச வரம்பு கிராமப்புறங்களில் ரூ.40 ஆயிரம் மற்றும் நகர்ப்புறங்களில் ரூ.60 ஆயிரம் என்பதை, கிராமப்புற மற்றும் நகர்ப்புற பயனாளிகளுக்கு ரூ. 72 ஆயிரமாக உயர்த்தி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.

இந்நிலையில் பயனாளிகளின் ஆண்டு உச்ச வரம்பை 72 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தி உத்தரவிட வேண்டுமென பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குநரகம் அரசுக்கு கோரிக்கை விடுத்தது.

இதனை ஏற்றுக் கொண்ட அரசு, 2021-22 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில், இலவச தையல் இயந்திரம், இலவச வீட்டுமனை உள்பட அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கான வருமான வரம்பு, 72 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சமாக ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவித்தது.

இதனை செயல்படுத்தும் விதமாக தற்போது பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கான வருமான வரம்பு 72 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதற்கான உத்தரவை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முதன்மை செயலாளர்ஆ. கார்த்திக் வெளியிட்டுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/free-housing-scheme-income-ceiling-for-beneficiaries-raised-to-one-lakh-370682/