வியாழன், 18 நவம்பர், 2021

மழை,வெள்ளம் பாதிப்பு: மத்திய அரசிடம் ரூ. 2,629 கோடி நிவாரணம் கேட்கும் தமிழகம்

 18 11 2021 வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கன்னியாகுமரியிலும் கனமழை கொட்டி தீர்த்தது. பல இடங்களில் குடியிருப்புக்குள் தண்ணர் புகுந்து தீவுப்போல் காட்சியளித்தது. இதன் காரணமாக, சாலைகள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும், தமிழக அமைச்சர்கள் குழுவும், வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இடங்களுக்கு நேரடியாகச் சென்று பாதிப்புகளைக் கணக்கிட்டு அறிக்கையாக வெளியிட்டது.

இந்நிலையில், தமிழக மழை வெள்ள நிவாரணத் தொகை தொடர்பாக, டி.ஆர்.பாலு டெல்லியில் உள் துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தார். அ்ப்போது, தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட வெள்ள பாதிப்பு அறிக்கை, அமித் ஷாவிடம் அளிக்கப்பட்டது.

சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு , ” 12 மாவட்டங்கள் மழையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மழை, வெள்ள பாதிப்பில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். 50,000 குடிசைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மழையால் 2,100 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ள பாதிப்பு ஏற்பட்ட தமிழகத்தைச் சீரமைக்க 2,079 கோடி ரூபாய் நிவாரணம் தேவை என்று வலியுறுத்தியுள்ளோம். இதில் மழை நிவாரணமாக உடனடியாக சுமார் 550 கோடி ரூபாய் வழங்க கோரிக்கை வைத்துள்ளோம். மொத்தமாக வெள்ள நிவாரண நிதியாக 2,629 கோடி ரூபாயைத் தமிழக அரசு கேட்டுள்ளது.

மழை வெள்ள பாதிப்பு சேதத்தைப் பார்வையிட ஆறு பேர் கொண்ட குழுவை மத்திய அரசு தமிழகத்துக்கு அனுப்புகிறது. முதல்வர் ஸ்டாலினுடமும் அமித் ஷா தொலைபேசியில் பேசினார். நிச்சயமாக தமிழக அரசு கேட்ட வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு அளிக்கும் ”என்று தெரிவித்தார்.

மத்திய அரசின் குழு, சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு நாளில் ஆய்வு மேற்கொள்வார்கள் என கூறப்படுகிறது.

தமிழ்நாடு அரசு சார்பாக ஏற்கனவே அவசர நிவாரண பணிகளுக்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-seeks-rs-2629-crore-relief-from-centre-to-assess-damage-370866/