செவ்வாய், 16 நவம்பர், 2021

வான்வழி பாதுகாப்புக்கு கூடுதல் பலம்… இந்தியாவுக்கு ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணைகள் விநியோகம் தொடக்கம்

 


இந்தியாவின் வான்வழி பாதுகாப்புக்கு கூடுதல் பலம் சேர்க்கும் எஸ்-400 ரக ஏவுகணைகள், இந்தியாவுக்கு விநியோகிக்கும் பணி தொடங்கிவிட்டதாக ரஷ்ய அரசு அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிநவீன எஸ்-400 ஏவுகணை, தரையிலிருந்து வானில் உள்ள நீண்ட தூர இலக்குகளைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

இந்த ஏவுகணை வாங்குவது தொடர்பாக 2018 ஆம் ஆண்டு 5 பில்லியன் டாலர்கள்(இந்திய மதிப்பில் (37,172 கோடி) மதிப்பிலான ஒப்பந்தத்தில் ரஷ்யாவுடன் இந்தியா கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் காரணமாக இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசு எச்சரித்தும், ஒப்பந்தம் கையொப்பமானது.

ரஷ்ய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக், ” ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணைகள் இந்தியாவிற்கு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக ரஷ்ய ராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்பு மையத்தின் இயக்குநர் ஷூகாய்வ் கூறுகையில், ” இந்தியாவில் எஸ் 400 ரக ஏவுகணை தொகுப்புகளை விநியோகிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. அந்த நடவடிக்கைகள் திட்டமிட்டபடி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என கூறியதாக தெரிவித்தது.

இருப்பினும், இதுவரை இந்திய தரப்பில் எவ்வித தகவலும் வெளியிடவில்லை. இந்தாண்டு இறுதிக்குள் ஏவுகணை விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கடல் மற்றும் வான் வழிகள் மூலம் உதிரிப்பாகங்களின் விநியோகம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

எஸ்-400 ஏவுகணையின் 5 தொகுப்புகளை வாங்கும் ஒப்பந்தத்தின்படி, கடந்த 2019இல் முதல்கட்டமாக 800 மில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் சுமார் 5,947 கோடி) இந்தியா ரஷியாவுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகவும் மேம்பட்ட வான்-பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றான எஸ்-400 ஏவுகணை, 400 கிமீ தூரத்தில் உள்ள இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்டது. இது ராக்கெட்டுகள், ஏவுகணைகள், கப்பல் ஏவுகணைகள், விமானங்களுக்கு எதிராகவும் அதன் வான் பாதுகாப்பைப் பாதுகாக்கும் திறன் கொண்டது.

இந்த ஏவுகணை அமைப்பு ஏற்கனவே சீனாவிடம் உள்ளது. லடாக் எல்லையில் இந்தியாவுக்கு மோதல் நிலவிய போது, எல்ஓசியில் இந்த பாதுகாப்பு அமைப்பை தான் சீனா நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் செய்தியாளர்களிடம் பேசிய விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் வி ஆர் சவுதாரி, ஒப்பந்தப்படி இந்தாண்டு முதல் எஸ்-400 தொகுப்பு படையில் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

ரஷ்யாவுடனான ஒப்பந்தம் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவில் மறைமுகமாக சலசலப்பு நிலவியது. பெரும்பாலான அதிகாரிகள், இந்தியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என எச்சரித்திருந்தது.

இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, “இந்தியாவும் அமெரிக்காவும் விரிவான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையைக் கொண்டுள்ளன” என்றும் “இந்தியா ரஷ்யாவுடன் ஒரு சிறப்புமிக்க மூலோபாய கூட்டாண்மையைக் கொண்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.

இதே அமைப்பை வாங்கியதற்காக 2020 டிசம்பரில் துருக்கி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது.

இதற்கிடையில், கடந்த மாதம், இரண்டு அமெரிக்க செனட்டர்கள், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

அதில், இந்த கொள்முதல் தொடர்பாக இந்தியாவிற்கு எதிரான எந்தவொரு தடைகளையும் தள்ளுபடி செய்யுமாறு அவரது நிர்வாகத்தை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/india/russia-starts-delivery-of-s-400-missiles-to-india-369483/