மக்களவையில் இன்று மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் மசோதா எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது. மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவைத் தாக்கல் செய்தார்.
வேளாண் சட்ட ரத்து மசோதா 2021 என்றால் என்ன?
இந்த வேளாண் சட்ட ரத்து மசோதா 2021, மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்டது.
- அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020
- விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020
- விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020.
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 19ஆம் தேதி மூன்று சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து, வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தற்போது, மக்களவையில் வேளாண் சட்ட ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
மசோதாவில் எத்தனை பிரிவுகள் உள்ளன?
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ஆறு பக்க மசோதாவில் மூன்று பிரிவுகள் மட்டுமே உள்ளன.
- முதல் பிரிவு சட்டத்தின் தலைப்பை வரையறுக்கிறது: வேளாண் சட்டங்கள் ரத்துச் சட்டம், 2021
- இரண்டாவது பிரிவு மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான விதிகளை கூறுகிறது.
- மூன்றாவது பிரிவு, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் 1955இன் 3வது பிரிவில் இருந்து துணைப்பிரிவு (1A)ஐ நீக்குவது ஆகும்.
துணைப் பிரிவு (1A) நீக்கம் ஏன்?
அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி, வழங்கல், விநியோகம் போன்றவற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிப்பதற்காக, அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955 இன் பிரிவு 3 இல் துணைப் பிரிவை (1A) அரசாங்கம் புதிதாக இணைத்தது.
போர், பஞ்சம், திடீர் விலை உயர்வு மற்றும் இயற்கை பேரழிவு போன்ற அசாதாரண சூழ்நிலையில், தானியங்கள், பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, வெங்காயம், சமையல் எண்ணெய் வித்துக்கள் மற்றும் எண்ணெய்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதற்கான நெறிமுறையை துணைப்பிரிவு (1A) வழங்குகிறது.
சட்டத் திருத்தத்தின்படி இம்மாதிரி கட்டுப்பாடுகளைப் பின்வரும் சூழலில்தான் விதிக்க முடியும்: அதாவது, தோட்டப் பயிர்களைப் பொறுத்தவரை அவற்றின் விலை கடந்த 12 மாதங்களின் சராசரி விலையைவிட 100 சதவீதம் அதிகரிக்க வேண்டும். தானியங்களைப் பொருத்தவரை, கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரி விலையைவிட 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும். அப்படி இருந்தாலும்கூட இந்தக் கட்டுப்பாடு உணவுப் பொருட்களைப் பதப்படுத்தும் நிறுவனங்களுக்குப் பொருந்தாது.
வேளாண் சட்டம் ரத்துக்கு அரசு கூறிய காரணம் என்ன?
வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா 2021ஐ தாக்கல் செய்த விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பல்வேறு காரணங்களை முன்வைத்தார்.
அவர் கூறியதாவது, “இந்தச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளில் ஒரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தாலும், வேளாண் சட்டங்களின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு ஏற்படுத்த அரசாங்கம் கடுமையாக முயன்றது. பல தரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
விவசாயிகளுக்கு இருக்கும் வழிமுறைகளை அகற்றாமல், அவர்களின் விளைபொருட்களின் வர்த்தகத்திற்கு புதிய வழிகள் வழங்கப்பட்டது. எங்கு விற்பனை செய்தால் அதிக விலை கிடைக்குமோ அவற்றை தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் வழங்கப்பட்டது.
இருப்பினும், வேளாண் சட்டங்களின் செயல்பாடு உச்ச நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது.கோவிட் காலத்தில், விவசாயிகள் உற்பத்தியை அதிகரிக்கவும், நாட்டின் தேவைகளை நிறைவேற்றவும் கடுமையாக உழைத்துள்ளனர்.
சுதந்திரத்தின் 75-வது ஆண்டை நாம் கொண்டாடும் போது – “ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்”, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் வளர்ச்சியின் பாதையில் ஒன்றாக அழைத்துச் செல்வதே காலத்தின் தேவை என்பதை குறிக்கிறது.
அதனை கருத்தில் கொண்டு, மூன்று வேளாண் சட்டம் ரத்து செய்யும் மசோதா தாக்கல் செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தனை நாட்கள் அமலில் இருந்தன?
மூன்று வேளாண் சட்டங்களின் பயணம் ஜூன் 5, 2020 அன்று தொடங்கியது. குடியரசுத் தலைவர் மூன்று அவசர சட்டங்களுக்கும் ஒப்புதல் வழங்கினார். அவசர சட்டம் முறையாக செப்டம்பர் 2020 இல் சட்டமாக இயற்றப்பட்டது. ஆனால், மூன்று வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது ஜனவரி 12, 2021 அன்று உச்ச நீதிமன்றத்தால் நிறுத்தப்பட்டது. அதன்படி, இந்த சட்டங்கள் 221 நாட்களுக்கு மட்டுமே அமலில் இருந்தன.
அடுத்து என்ன?
அடுத்ததாக வேளாண் சட்டம் ரத்து மசோதா 2021, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
source https://tamil.indianexpress.com/explained/what-is-the-farm-laws-repeal-bill-2021/