புதன், 24 நவம்பர், 2021

தனியார் கிரிப்டோகரன்சி தடை, வேளாண் சட்டம் ரத்து’ – 26 மசோதா தாக்கல் செய்யும் மத்திய அரசு

 

தனியார் கிரிப்டோகரன்சியை தடை செய்யும் சட்ட மசோதாவையும், 3 வேளாண் சட்டம் ரத்து செய்யும் மசோதாவையும், நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் அறிமுகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நவம்பர் 29ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில், மொத்தம் 26 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதில், கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணய கட்டுபாடு மசோதா 2021 (The Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill, 2021) என்ற மசோதாவும் அடக்கம்.

இந்த மசோதா இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளை தடை செய்யவும், இந்திய ரிசர்வ் வங்கி மூலம் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயத்தை உருவாக்க கட்டமைப்பை ஏற்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.இருப்பினும், கிரிப்டோகரன்சியின் அடிப்படை தொழில்நுட்பத்தையும் அதன் பயன்பாடுகளையும் மேம்படுத்த சில விதிவிலக்குகளை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது, நாட்டில் கிரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்துவதற்கு எந்த கட்டுப்பாடோ அல்லது தடையோ கிடையாது.

கிரிப்டோகரன்சி எனப்படும் டிஜிட்டல் நாணயம் பல நாடுகளில் பிரபலமடைந்து வருகிறது. அதிகளவிலான பரிவர்த்தனை காரணமாக, அதன் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த மாதத்தில் அதன் சந்தை மதிப்பு அதிகளவில் உள்ளன. Coinmarketcap.com படி, 24 மணி நேரத்தில் பிட்காயின் மதிப்பு 0.09 சதவீதம் உயர்ந்துள்ளது. அதே போல், Ethereum இன் விலை 2.68 சதவீதம் உயர்ந்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி, மூத்த அதிகாரிகளுடன் கிரிப்டோகரன்சிகள் குறித்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். அதில், சிக்கலைச் சமாளிக்க வலுவான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்து அதிக வருமானத்தை பெறலாம் என திரைப்பட நட்சத்திரங்கள் கூறும் விளம்பரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே சமயம், தவறான நம்பிக்கை மூலம் முதலீட்டாளர்களை கவரும் வகையில் இத்தகைய நாணயங்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

கிரிப்டோகரன்சி நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக ரிசர்வ் வங்கி கருத்து தெரிவித்தது. கிரிப்டோகரன்சிகளில் வர்த்தகம் செய்யும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களது சந்தை மதிப்பு ஆகியவற்றிலும் சந்தேகம் இருப்பதாகவும் கூறுகிறது.

இம்மாத தொடக்கத்தில், RBI கவர்னர் சக்திகாந்த தாஸ், கிரிப்டோகரன்சி மீதான தனது எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்தினார். அவை மத்திய வங்கிகளால் கட்டுப்படுத்தப்படாமல் இருப்பதால், எந்தவொரு நிதி அமைப்புக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகக் கூறினார்.

ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் நாணயம்

இதன் காரணமாக தான், ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ கிரிப்டோகரன்சியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர, நான்கு வாரம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், மின்சாரம் திருத்தம் மசோதா, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர்களின் பதவி காலம் நீட்டிப்பு மசோதா போன்றவை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், இந்த இரண்டு மசோதாவுக்கும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

source https://tamil.indianexpress.com/india/govt-plans-bills-to-bar-pvt-cryptocurrency-and-repeal-farm-laws-373459/