Indian Railways Tamil News: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (IRCTC) மத சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சியில் ஸ்ரீ ராமாயண யாத்ரா சுற்றுப்பயணங்களைத் திட்டமிட்டு இருந்தது. இதற்காக சிறப்பு ரயிலை இந்திய ரயில்வே நிர்வாகம் அறிமுகதியுள்ளது. இந்த ரயில் 17 நாள் பயணமாக நவம்பர் 7ஆம் தேதி அன்று புறப்பட்டது.
மேலும், டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் இந்து மதக் கடவுள் ராமரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய அனைத்து முக்கிய இடங்களுக்குச் செல்லும் என்றும், இந்த ரயில் பயணத்தின் கடைசி இடமாக ராமேஸ்வரம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த ராமாயண் எக்ஸ்பிரஸில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காவி நிற உடை சீருடையாக வழங்கப்பட்டு இருந்த நிலையில், அது இந்து சமய மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு உஜ்ஜயினியைச் சேர்ந்த இந்து சமய துறவிகள் வலுவான கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பேசிய உஜ்ஜைன் அகடா பரிஷத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் அவதேஷ்புரி, “சாது போன்ற தலைக்கவசத்துடன் காவி உடை அணிவதும், ருத்ராட்ச மாலைகளை அணிவதும் இந்து மதத்தையும் அதன் துறவிகளையும் அவமதிக்கும் செயலாகும்.” என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், ராமாயண் எக்ஸ்பிரஸில் பணியாற்றும் ஊழியர்களின் சீருடையை நேற்று திங்கள் கிழமை இந்தியன் ரயில்வே மாற்றியது. இது குறித்து ரயிலை இயக்கும் ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேவை ஊழியர்களின் தொழில்முறை ஆடை முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கிறோம். மேலும், ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஊழியர்களின் சீருடைகள் சட்டை மற்றும் கால்சட்டை மற்றும் பாரம்பரிய தலைக்கவசமாக மாற்றப்பட்டுள்ளன. இருப்பினும், பணியாளர்கள் காவி முகமூடிகள் மற்றும் கையுறைகளை அணிந்து இருக்கிறார்கள்.
இந்திய ரயில்வே அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “இந்த சர்ச்சையை ஏற்படுத்த வேண்டாம் என்றும், சீருடையை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக மாற்றவும் முடிவு செய்துள்ளோம்.” என்றார்.
source https://tamil.indianexpress.com/india/indian-railways-tamil-news-irctc-changes-saffron-uniform-of-ramayan-express-staff-373008/