வியாழன், 25 நவம்பர், 2021

மம்தா பானர்ஜியுடன் சந்திப்பு : திரிணாமுல் காங்கிரஸில் இணைவது குறித்து சுப்பிரமணிய சுவாமி விளக்கம்

 24 11 2021 

Subramanian Swamy meets Mamata Banerjee in Delhi : பாஜகவின் மூத்த தலைவராக சுப்பிரமணிய சுவாமி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை இன்று சந்தித்து பேசியுள்ளார். டில்லியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

பாஜகவின் மூத்த தலைவர்களின் ஒருவர் சுப்பிரமணிய சுவாமி. பாஜகவின் தேசிய செயற்குழுவில் முக்கிய பொறுப்பில் இருந்து அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அக்குழுவில் இருந்து நீக்கப்பட்டார். அன்று முதல் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளை பாராட்டி வந்த அவர், கடந்த அக்டோபர் மாதம் ரோம் நகரில் நடைபெற்ற உலகளாவிய அமைதி மாநாட்டில் கலந்து கொள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அனுமதி மறுத்தது குறித்து மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

மேலும் கடந்த சட்டசபை தேர்தலின் போது நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மம்தா பானர்ஜி பிரச்சாரத்தின்போது காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். அவரின் இந்த வாழ்த்து செய்தி மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே பெரும் மோதலை ஏற்படுத்தியது.

பாஜகவில் இருந்து அதன் எதிர் கடசியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பது குறித்து சுப்பிரமணிய சாமி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் இதற்கு பதில் அளித்த அவர், “என்னைப் பொறுத்தவரை மம்தா பானர்ஜி ஒரு இந்து மற்றும் துர்கா பக்தர். நியாயத்தின் அடிப்படையில் செயல்படுகிறார். அவரின் அரசியல் வேறு. தளத்தில் விமர்சனம் செய்யலாம் என்று.கூறியிருந்தார்.

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இன்று (புதன்கிழமை) சந்தித்துப் பேசினார். டில்லியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் மாலை 3.30 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெற்றது. முன்னதாக சுப்பிரமணிய சுவாமி கொல்கத்தாவில் நேற்று கொல்கத்தாவில் மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கரை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

மம்தா பானர்ஜியுடன் சந்தித்து பேசியதால் சுப்பிரமணி சுவாமி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக தகவல் வெளியானது. ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணிய சுவாமி. “நான் ஏற்கனவே மம்தா பானர்ஜியுடன் இருந்தேன். நான் கட்சியில் சேர வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறியுள்ளார்.

சுப்பிரமணி சுவாமியுடனான சந்திப்பை தொடர்ந்து மம்தா பானர்ஜி மாலை 5 மணிக்கு, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார், இந்த சந்திப்பின்போது மேற்கு வங்காளத்தில் பிஎஸ்எப் பிராந்திய அதிகார வரம்பு மற்றும் திரிபுராவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் உட்பட பல்வேறு பிரச்சினைகளை குறித்து பேச உள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

source https://tamil.indianexpress.com/india/bjp-senior-leader-subramanian-swamy-meet-wb-cm-mamtha-banerjee-373823/