26 11 2021 High Rainfall updates in Tamilnadu Rain Forecast Tamil News : தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீண்ட நேரம் நீடிப்பதாகவும், காற்று உந்துதல் குறைந்துள்ளதால், அது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பில்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தென்காசி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தேனி, மதுரை மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 27-ம் தேதி வரை குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், தென் கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வருகிற 29-ம் தேதி தெற்கு அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
மேலும், கன்னியாகுமரி, நாகை, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், புதுக்கோட்டை, பெரம்பலூர், தென்காசி, தஞ்சை, கள்ளக்குறிச்சி, மதுரை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, விழுப்புரம், கடலூர்,மயிலாடுதுறை, அரியலூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் கன்னியாகுமரி, நாகை, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், புதுக்கோட்டை, பெரம்பலூர், தென்காசி, தஞ்சை, கடலூர்,மயிலாடுதுறை, அரியலூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/high-rainfall-updates-in-tamilnadu-rain-forecast-tamil-news-374557/