புதன், 17 நவம்பர், 2021

சென்னைக்கு மீண்டும் ரெட் அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை!

 

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு வரும் 18ஆம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல்பகுதியில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி நிலவுகிறது. இது  அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து, வரும் 18ஆம் தேதி தெற்கு ஆந்திரா – வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும்.

இதனால் நாளை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிகக்கனமழையும், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் நாளை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாளான 18ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கான  வாய்ப்பும், குறிப்பிட்ட சில இடங்களில் அதிகனமழைக்கான வாய்ப்பும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களின் ஒருசில இடங்களிலும் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களின் பல பகுதிகளில் இடியுடன்கூடிய மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது. அத்துடன் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வரும் 19ஆம் தேதி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களின் ஒருசில இடங்களில், இடியுடன்கூடிய கனமழையும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

வருகின்ற 20ஆம் தேதி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் நகரின் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் எனவும், அடுத்த 48 மணி நேரத்தில், சென்னையின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/red-alert-issued-for-chennai-and-neighboring-districts-370329/