21 11 2021
இந்தியா போன்ற பரந்த பல மதங்களை கடைபிடிக்கும் நாட்டிற்கு பொது சிவில் சட்டம் பொருத்தமானதும் இல்லை, பயனுள்ளதும் இல்லை என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
மேலும், பொது சிவில் சட்டம் என்பது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மதத்தைப் பின்பற்றுவதற்கான அடிப்படை உரிமைக்கு எதிரானது என்று முஸ்லிம் வாரியம் கூறியுள்ளது.
இந்தியா பல சமய நம்பிக்கைகள் கொண்ட ஒரு நாடு, ஒவ்வொரு குடிமகனும் தனது நம்பிக்கையயும் மற்றும் மத நம்பிக்கைகளை கடைப்பிடிக்கவும், வெளிப்படுத்தவும், செயல்படவும், பிரசங்கிக்கவும் உத்தரவாதம் அளிக்கிறது. இந்தியா போன்ற பரந்த பல மதங்களைக் கொண்ட நாடுகளுக்கு பொது சிவில் சட்டம் பொருத்தமானதும் இல்லை. பயனுள்ளதும் இல்லை. இந்த திசையிலான எந்த முயற்சியும் நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு முரணானது,” என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அதன் 27வது பொது அமர்வின் இரண்டாவது மற்றும் இறுதி நாளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறியுள்ளது.
ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, பகுதியளவிலோ அல்லது முழுமையாகவோ திணிக்க அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது. அவ்வாறு செய்வது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று இந்த வாரியம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முஹமது நபியை அவமதிக்கும் நோக்கில் செயல்பட்ட சில விஷமத்தனமான நபர்கள் மீது கைந்து நடவடிக்கை எடுக்க வாய்பு இருந்தும், அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுக்கத் தவறிவிட்டது என்று குறிப்பிட்டு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வகுப்புவாத சக்திகளின் இந்த அணுகுமுறை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது நாட்டில் முரண்பாட்டை ஏற்படுத்துவதாகவும், தேசியவாதம் மற்றும் தேசபக்தியின் நலன்களுக்கு எதிரானதாகவும் உள்ளது என்று வாரியம் கூறியுள்ளது.
முஹமது நபியை எத்தகைய அவமதிப்பு செய்தாலும், அது உலக முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும். அரசாங்கத்திடம் இறைத் தூதர்களை அவமரியாதை செய்பவர்களை தண்டிக்க வேண்டும் என்றும், பிரச்சினையைச் சமாளிக்க சட்டம் இயற்ற வேண்டும் என்றும் இந்த வாரியம் கோரியுள்ளது.
சில முஸ்லிம் மத தலைவர்கள் கட்டாய மதமாற்றம் என்ற பொய்யான வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டுள்ளதாக வாரியம் கூறியது, மதம் மாறியவர்கள் கட்டாயப்படுத்தப்படுவதைப் பற்றி போலீஸில் புகார் எதுவும் செய்யப்படவில்லை என்று கூறியுள்ளது.
நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து வாரியம் தனது கவலையை வெளிப்படுத்தியது. மேலும், வரதட்சணை மரணங்கள் அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளது. பெண்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான சட்டங்களை உருவாக்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
சிறுபான்மையினரைப் பாதுகாப்பது அரசின் கடமை என்றும், பங்களாதேஷில் உள்ள கோயில்களுக்கு ஏற்பட்ட சேதம் வருந்தத்தக்கது என்றும் திரிபுராவில் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுவது வருந்தத்தக்கது என்றும் வாரியம் கூறியது.
முதல் நாள் (சனிக்கிழமை) நடைபெற்ற பொது அமர்வில், வாரியத் தலைவராக மௌலானா ரபே ஹசன் நத்வி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
மௌலானா வளி ரஹ்மானின் மறைவையடுத்து காலியான பொதுச் செயலாளர் பதவிக்கு மௌலானா காலித் சைபுல்லாஹ் நியமிக்கப்பட்டுள்ளார். மௌலானா கல்பே சாதிக்கின் மறைவைத் தொடர்ந்து காலியாக இருந்த துணைத் தலைவர் பதவியை மௌலானா அர்ஷாத் மத்னி நிரப்பினார்.
source https://tamil.indianexpress.com/india/uniform-civil-code-not-suitable-for-multi-religious-country-like-india-all-india-musilim-persons-law-board-372390/