செவ்வாய், 30 நவம்பர், 2021

300 சாலைகளுக்கு ஒப்பந்தம்: எஸ்.பி வேலுமணி சொன்னது பொய்யா? சவால் விடும் செந்தில் பாலாஜி!

 Minister Senthil Balaji challenge to AIADMK whip SP Velumani, Minister Senthil Balaji, AIADMK whip SP Velumani, 300 road works in coimbator, 300 சாலைகளுக்கு ஒப்பந்தம், எஸ் பி வேலுமணி குற்றச்சாட்டு, சவால் விடும் செந்தில் பாலாஜி, திமுக, DMK, AIADMK, Coimbatore, Tamilnadu

கோவை மாநகராட்சியில் 300 சாலைகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு நிறுத்தப்பட்டதாகக் கூறும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதற்கான ஆதாரத்தை முடிந்தால் இரண்டு நாட்களில் வெளியிட வேண்டும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சவால் விடுத்துள்ளார்.

கோவையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் கோவை மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 28) நடைபெற்றது.

கோவை ராம்லட்சுமி திருமண மஹாலில் நடைபெற்ற இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில், சிறப்புரை விருந்தினராக தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டார்.

இந்த கலந்தாய்வும் கூட்டத்தில், கோவை மாவட்டத்திற்குத் தேவையான வளர்ச்சி பணிகளுக்கான பட்டியல்களை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய, கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈஸ்வரன்: “கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கப் பணியைத் தமிழக முதல்வர் வேகப்படுத்தியுள்ளார். கோவையில் தேவையான வளர்ச்சித் திட்டங்களை நாங்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மனுவாகக் கொடுத்துள்ளோம். அமைச்சர் வாக்குறுதி கொடுத்துள்ளார். கடந்த ஆட்சியில் அனைத்து துறைகளிலும் முறைகேடு நடந்துள்ளது. காவல்துறை இதற்காக நடவடிக்கை எடுத்துக் கொண்டு வருகிறது. கைது செய்யப்பட வேண்டியவர்கள் கண்டிப்பாகக் கைது செய்யப்படுவார்கள்” என்று கூறினார்,

ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி; “கோவை வளர்ச்சி திட்டங்கள் குறித்து 16 பக்க கோரிக்கைகள் என்னிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள் தமிழக முதல்வரிடம் ஒப்படைக்கப்படும். தமிழ்நாடு முதல்வர் இந்த கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவார்.” என்று கூறினார்.

அப்போது, கோவையில் 300 சாலைகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு நிறுத்தப்பட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றம்சாட்டியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “எந்தெந்த சாலைப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. எந்தெந்த சாலைகளுக்குத் திட்ட மதிப்பீடு வழங்கப்பட்டது, அதன் வேலை உத்தரவு, வேலை தொடக்கம் ஆகியவற்றின் பட்டியலைத் தெளிவாக வெளியிடட்டும்.

நிர்வாக அனுமதி இல்லாமல், டெண்டர் கூட விடாமல் எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றாமல், வெறும் தேர்தலை மட்டும் கருத்தில் கொண்டு பொதுமக்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக அந்த சாலைப் பணிகள் தொடங்கப்பட்டது. நிதி ஆதாரங்கள் இல்லாமல் தொடங்கப்பட்ட பட்டியலை இரண்டு நாட்களுக்குள் வெளியிடட்டும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் குற்றச்சாட்டுகளுக்கு சவால் விடுத்துப் பேசினார்.

முன்னதாக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி கோவையில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 26) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற கொறடாவுமான எஸ்.பி. வேலுமணி, “திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு கோவையில் சாலைப் பணிகள் உட்பட 300 பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் சிரமப்பட்டுவருகின்றனர். மக்கள் பிரச்சனைகளைத் தமிழக அரசு உடனடியாக தீர்க்காவிட்டால் ஒருவார காலத்திற்குள் தமிழ்நாடு அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்று விமர்சனம் செய்திருந்தார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில், திமுக 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. இந்த சூழலில், கோவையில் சாலைப் பணிகள் உட்பட 300 பணிகள் ஒப்பந்தம் போடப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளன என்று எஸ்.பி வேலுமணி குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு 2 நாட்களில் ஆதாரங்களை வெளியிடட்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார்.

இதே போல, சில வாரங்களுக்கு முன்பு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மின்சாரம் கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாகவும் ஆதாரங்கள் வெளியிடப்படும் என்று கூறி மின்சார கொள்முதல் கணக்கை வெளியிட்டபோது, அதில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை. இது எல்லாமே அதிமுக ஆட்சிக் காலத்தில் கடைபிடித்த நடைமுறையைக் கடைபிடிக்கிறோம். எக்ஸெல் ஷீட் வைத்துக்கொண்டு ஆதாரம் என சொல்லக்கூடாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி சளைக்காமல் பதிலடி கொடுத்தார். அந்த வரிசையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, விமர்சனங்களை முன்வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதற்கான ஆதாரங்களை 2 நாட்களில் வெளியிட வேண்டும் என்று சவால் விடுத்துள்ளார். இதனால், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வைத்த குற்றச்சாட்டு உண்மையா பொய்யா என்ற விவாதம் எழுந்துள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/minister-senthil-balaji-challenge-to-aiadmk-whip-sp-velumani-on-300-road-works-in-coimbatore-376010/