வியாழன், 25 நவம்பர், 2021

முதலமைச்சரின் முதல் பொங்கல்; மீண்டும் தொடங்குமா சென்னை சங்கமம் விழா

 பத்தாண்டுகளுக்கு பிறகு, முதலைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு, முந்தைய திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட சில திட்டங்கள் மீண்டும் தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தது. அந்த வகையில், சென்னை சங்கமம் விழா நடைபெறுமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தன.

முந்தைய திமுக ஆட்சியில் பொங்கல் பண்டிகையின்போது தமிழக நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளின் சென்னை சங்கம் கலாச்சார திருவிழா மீண்டும் விரைவில் தொடங்க உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதனால், மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சரான பின்னர் வருகிற முதல் பொங்கல் பண்டிகைக்கு சென்னை சங்கம் விழா கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வது குறித்து அண்மையில் அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மறைந்த திமுக தலைவர் மு.க.கருணாநிதி முதலமைச்சராக இருந்த 2006 – 2011 ஆட்சி காலத்தில் சென்னை சங்கம் விழா 2007ம் பொங்கல் பண்டியின்போது சென்னையில் பல்வேறு இடங்களில் ஒருவார காலம் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளின் சென்னை சங்கமம் விழா நடைபெற்றது. சென்னை சங்கமம் விழா சென்னை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதுநாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ஒரு அங்கீகாரமாகவும் அவர்களுக்கான வாய்ப்பாகவும் அமைந்தது.

கருணாநிதியின் மகளும் திமுக எம்.பி-யுமான கனிமொழியின் சிந்தனையில் உருவானதுதான் சென்னை சங்கம் விழா. இதற்கு முன்பு தமுஎகசவின் கலை இரவு நிகழ்ச்சிகள் பிரபலமானவையாக இருந்தன. 2011ம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் கலைக் குழுக்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்குப் பிறகு சென்னை சங்கமம் விழா நடைபெறவில்லை. இந்த சூழ்நிலையில்தான், கடந்த மே மாதம் மு.க.ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு, சென்னை சங்கமம் விழாவை மீண்டும் நடத்த வேண்டும் என்று செயல்பாட்டாளர்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்தன.

சில நாட்களுக்கு முன்பு, திமுக எம்.பி கனிமொழியை பல்வேறு நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத்தினர் சந்தித்து சென்னை சங்கம் விழாவை மீண்டும் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு கனிமொழி, சென்னை சங்கமம் விழாவை நடத்துவது குறித்து முதலமைச்சரிடம் எடுத்துரைத்து, அரசிடம் இருந்து சாதகமான பதிலை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார். மாநில அரசின் சுற்றுலாத் துறையின் முதன்மைச் செயலாளர் பி சந்திரமோகன் ஊடகங்களிடம் கூறுகையில், “கோவிட் விதிமுறைகளைப் பின்பற்றி பொங்கல் பண்டிகையின்போது நாட்டுப்புற கலை விழாவை நடத்துவதற்கான சாத்தியங்களை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இது தொடர்பாக புதன்கிழமை (நவம்பர் 24) விவாதம் நடத்த உள்ளதாக” தெரிவித்துள்ளார்.

தான் உருவாக்கிய கலாச்சார நிகழ்சியான சென்னை சங்கமம் விழாவை மீண்டும் நடத்துவது குறித்து கனிமொழி பேசுகையில், “நாட்டுப்புறக் கலைஞர்களும், மக்களும் இந்நிகழ்ச்சியை மீண்டும் நடத்த வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளனர். அரசும் தனது நோக்கத்தை அறிவித்துள்ளது. விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

மு.க.ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு, வருகிற முதல் பொங்கல் பண்டிகையில் விழாவை நடத்த அரசு பெரிய திட்டங்களை வகுத்துள்ளதாகவும், அந்த பிரம்மாண்ட திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை சங்கமம் போன்ற நாட்டுப்புற கலை விழாக்கள் நடத்தப்படும் என்று திமுக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன. சென்னையில் ஒரு பெரிய நாட்டுப்புற கலை விழாவுடன், மகாபலிபுரத்தில் பாரம்பரிய நடன விழாவான இந்திய நடன விழாவையும் நடத்த அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-sangamam-festival-to-be-arranged-in-first-pongal-festival-of-cm-mk-mk-stalin-373752/