டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் 10 நாட்களுக்கு மேலாக நச்சு புகை மண்டலத்தால் சூழப்பட்டுள்ளது. காற்றின் தர குறியீடு பல நாட்களாக மிகவும் மோசமான வரம்பில் இருப்பதால், அதனை கட்டுப்படுத்த அரசு 2 நாள் ஊரடங்கு அறிவிக்கலாமே என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதனைத் தொடர்ந்து, அதனை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு அதிரடியாக நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.
அதனன தொடர்ந்து, டெல்லி மற்றும் அண்டை பகுதிகளில் காற்று மாசுபாடு நெருக்கடியைச் சமாளிக்க பல்வேறு கட்டுப்பாடுகளைக் காற்று தர மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, என்சிஆர் பகுதியில் வரும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் அரசிடம் இருந்து மறு அறிவிப்பு வரும் வரை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 21ஆம் தேதி வரை கட்டுமான மற்றும் இடிப்பு பணிகளுக்கும் தடையும், அரசு அலுவலக பணியாளர்கள் 50 விழுக்காடு நபர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. தனியார் நிறுவனங்களிலும் இந்த நடைமுறை பின்பற்ற ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நவம்பர் 21ம் தேதி அரை அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் டிரக்குகளை தவிர தேவையற்ற டிரக், லாரிகள் டெல்லி பகுதிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு, சூழ்நிலை பொறுத்து அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணையம் டெல்லியின் அண்டை மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகியவற்றிலும் நவம்பர் 21 ஆம் தேதி வரை என்சிஆர் பகுதியில் வரும் அனைத்து தனியார் நிறுவனங்களிலும் 50 சதவீத ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதை “ஊக்குவிக்க” அறிவுறுத்தியுள்ளது.
தலைநகரில் ரயில்வே, மெட்ரோ, விமான நிலையம், பேருந்து முனையங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான திட்டங்கள் தவிர அனைத்து கட்டுமான பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது.டெல்லியிலிருந்து 300 கிமீ சுற்றளவில் உள்ள 6 அனல்மின் நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் ஆலோசனைக்குப் பிறகு, CAQM இந்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. டெல்லி-ஏசிஆரில் காற்றின் தரம் மோசமாக இருக்கும் என்றும், நவம்பர் 21க்குப் பிறகு மேம்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியிலிருந்து 300 கிமீ சுற்றளவில் இயங்கி வரும் 11 அனல் மின் நிலையங்களில், NTPC ஜஜ்ஜார், மகாத்மா காந்தி TPS ஜஜ்ஜார், பானிபட் TPS HPGCL, நபா பவர் லிமிடெட் ராஜ்புரா மற்றும் தல்வண்டி சபோ மான்சா ஆகிய ஐந்து மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவை நவம்பர் 30-ம் தேதி வரை மூடப்பட உத்தரவிட்டுள்ளது. மூடப்பட்ட நிலையங்களால் ஏற்படும் மின் இழப்பு தேவைகள், மற்ற மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து வழங்கப்படும் என மின்சாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சாலைகளில் கட்டுமான பொருட்கள் மற்றும் கழிவுகளை அடுக்கி வைக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரக்காலத்தைத் தவிர டீசல் ஜெனரேட்டர் பெட்டிகளைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகள் புகை எதிர்ப்பு கருவி, தண்ணீர் தெளிக்கும் இயந்திரங்களைத் தினசரி மூன்று முறை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/india/schools-colleges-shut-and-construction-work-halt-till-nov-21-due-to-air-pollution-delhi-370653/