19 11 2021 விளையாட்டு துறைகளில் சாதிக்கும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு அரசு மற்றும் பொதுத்துறைகளில் தகுதி அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் 2 சதவீதமாக இருந்த இடஒதுக்கீடு கடந்த அதிமுக ஆட்சியில், 3 சதவீதமாக உயர்த்தி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். இந்த இடஒதுக்கீட்டில் பல்வேறு விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டது.
ஆனால் இந்த பட்டியலில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் சேர்க்கப்படாதது அதிருப்தியை ஏற்படுத்தியது. தமிழர் பாரம்பரியத்தின் அடையாளமாக உள்ள சிலம்பம் விளையாட்டில் சாதிப்பவர்களுக்கு இந்த 3 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கும்படி சிலம்பம் கற்கும் மாணவர்களும், மற்றும் பயிற்சியாளர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இது தொடர்பாக அரசு எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.
இதனால் சிலம்பம் கற்றும் மாணவர்கள் மற்றும் பயிற்சியாளாகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் சிலம்பம் சேர்க்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பாக விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் .தற்போது கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக 3 சதவீத இடஒதுக்கீட்டில் சிலம்பம் விளையாட்டு சேர்க்கப்பட்டதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும் மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற தொழில்முறை படிப்புகளில் சேர்வதற்கான விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் பரிசீலிக்கப்படும் விளையாட்டுத் துறைகளில் சிலம்பம் சேர்க்கப்பட்டுள்ளது. சிலம்பத்தில் உள்ள முதுகலை டிப்ளமோ, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. விளையாட்டுப் பல்கலைக்கழகம், மாநில அளவிலான பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் விளையாட்டுத் துறைகளில் சிலம்பம் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு இந்தியா தனது போட்டிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பு சிலம்பம் கற்கும் மாணவர்கள் மற்றும் பயிற்சியளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த அறிவிப்பின் மூலம், தேசிய, மாநில அளவில் சிலம்பப் போட்டியில் சாதனை படைப்பவர்கள் இந்த இடஒதுக்கீட்டில் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-government-approved-silambam-sports-up-to-percent-reservation-371443/