வியாழன், 18 நவம்பர், 2021

வலுப் பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தை நெருங்குவது எப்போது?

 

Tamilnadu Rain Update : வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுபெறாது என்று நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை வலுபெற்றுள்ளதால் தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் உள்ள அணைகளில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றுக்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகளில் மழை நீர் ஊருக்குள் புகுந்து வீடுகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் பெரும் மழை வெள்ளத்தால் மக்கள் கடுமையாக துயரத்தை சந்தித்துள்ளனர். இந்த சூழ்நிலையில், மக்களுக்கு உதவும் வகையில் தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

தொடர்ந்து ஒரு வார துயரத்திற்கு பிறகு சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்கள் இயல்பு நிலைக்கு திரும்பிகொண்டிருக்கும் நிலையில், கடந்த 3 தினங்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் முழுவதும் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் மீண்டும் மழை வெள்ளம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாகவும், இதன் காரணமாக அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து நாளை வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதிகளை வந்தடையும் என்று வானிலை ஆய்வு மையம்கூறியுள்ளர்.

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலு பெறாது என்று நேற்று வரை கனிக்கப்பட்ட நிலையில், தற்போது வலு பெற்றுள்ளதால் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-rain-update-chance-of-becoming-a-low-pressure-370853/