இ-ஷ்ரம் தளத்தில் 7.86 கோடிக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர். ஆதார் அடையாளத்துடன் இணைக்கப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களின் நாட்டின் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட தரவுத்தளத்தில் 40.5 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் (ஓபிசி), 27.4 சதவீதம் பொது பிரிவினருரும், 23.7 சதவீதம் பட்டியல் இனத்தவரும் (எஸ்சி) மற்றும் 8.3 சதவீதம் பழங்குடியினரும் பதிவு செய்துள்ளனர்.
நாட்டில் உள்ள முறைசாரா துறை தொழிலாளர்கள் முதல் முறையாக தங்கள் சமூக விவரத்தை அளிப்பதால் இந்த மதிப்பீடுகள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன.
2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, எஸ்சி பிரிவினரின் மக்கள்தொகைப் பங்கு 16.2 சதவீதமாகவும், எஸ்டி மக்கள்தொகைப் பங்கு 8.2 சதவீதமாகவும் உள்ளது. ஓபிசி-யினரின் எண்ணிக்கை மக்கள்தொகை கணக்கெடுப்பில் விவரிக்கப்படவில்லை. ஆனால், 2007-ம் ஆண்டு தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (NSSO) நடத்திய கணக்கெடுப்பில் OBC பிரிவினரின் மக்கள்தொகைப் பங்கு 40.9 சதவீதமாக இருந்தது. பொதுப் பிரிவினர் சுமார் 34 சதவீதம் பேர் உள்ளனர்.
தொழில் வாரியான பதிவு டேட்டா விவசாயத் துறையில் அதிகபட்சமாக (53.6 சதவீதம்) பதிவுகள் காணப்படுகிறது. அதைத் தொடர்ந்து, கட்டுமானப் பிரிவில் (12.2 சதவீதம்) மற்றும் வீடு மற்றும் வீட்டுப் பணியாளர்கள் (8.71 சதவீதம்) பதிவாகியுள்ளன.
இந்த தளத்தில் அமைப்புசாரா துறை தொழிலாளர்களின் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தொழிலை பதிவு செய்து வருகிறது. கிராமப்புறங்களில் உள்ளவர்கள் வழக்கமாக இரண்டு தொழில்களையும் பதிவு செய்கிறார்கள்.
“முறைசாரா மற்றும் முறையான வேலை தொழில்களுக்கு இடையே மாறிய பல அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளனர். ஒரு விவசாயத் தொழிலாளி அந்த வருடத்தில் வேறு ஒரு கட்டத்தில் கட்டுமானத் தொழிலாளியாகவும் வேலை செய்யலாம் என்று கூறுகிறது. எனவே இந்த தளம், முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தொழிலின் அடிப்படையில் தகவல்களைப் பதிவு செய்கிறது. பொதுவாக கிராமப்புறங்களில், அமைப்புசாரா தொழிலாளர்கள் இரண்டு தொழில்கலை பார்க்கிறார்கள். தொழிலாளர்கள் தங்கள் விவரங்களை புதுப்பிக்க முடியும். இதனால், டேட்டா மாறும், அவை புதுப்பித்த நிலையில் இருக்கும்” என்று தொழிலாளர் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.
விவசாயத்தில், மேற்கு வங்கம் 13.38 சதவீதம் அல்லது 1.05 கோடி பதிவுகளுடன் முன்னணியில் உள்ளது. இதையடுத்து, ஒடிஷா 10.5 சதவீதம் (82.6 லட்சம்), உத்தரபிரதேசம் 9.15 சதவீதம் (71.9 லட்சம்), பீகார் 5.71 சதவீதம் (44.9 லட்சம்) மற்றும் ஜார்கண்ட் 3.03 சதவீதத்துடன் (23.82 லட்சம்) பதிவுகளுடன் உள்ளன. பயிர் மற்றும் வேளாண் தொழிலாளர்கள், வயல் பயிர் மற்றும் காய்கறி விவசாயிகள் உள்ளிட்ட தொழிலாளர்களின் பதிவுகள் அதிகம் காணப்படுகிறது.
கட்டுமானத் துறையில், மேற்கு வங்கம் 17.03 லட்சம் பதிவுகளுடன் முன்னணியில் உள்ளது. இதையடுத்து, உத்தரப் பிரதேசம் (14.95 லட்சம்), பீகார் (13.13 லட்சம்) மற்றும் ஒடிஷா (12.04 லட்சம்) ஆகிய இடங்களில், கட்டிடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களின் பதிவுகள் அதிகம் உள்ளது.
‘வீடு மற்றும் வீட்டு வேலையாட்கள்’ என்ற தொழில் பிரிவில் 68.47 இலட்சம் என்ற அளவில் மூன்றாவது மிக அதிகப் பதிவுகள் காணப்படுகிறது. இதில் வீட்டு சமையல் வேலை செய்பவர்கள் (56.02 லட்சம்), துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் (12.45 லட்சம்) அதிக பங்கைக் கொண்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் வீடு மற்றும் வீட்டுப் பணியாளர்களுக்கான பதிவுகளில் அதிகபட்சமாக 21.63 லட்சமும், மேற்கு வங்கத்தில் 14.29 லட்சமும், பீகாரில் 13 லட்சமும் பதிவாகியுள்ளன.
அமைப்புசாராத் துறைத் தொழிலாளர்களின் பணி விவரங்களின் பரந்த வகைப்பாட்டை செயல்படுத்துவதற்காக அரசாங்கம் சமீபத்தில் தொழில் வகைகளை 160லிருந்து 400 ஆக விரிவுபடுத்தியது. “தொழிலாளர்களின் பணியின் தன்மையை விரிவாகப் பதிவுசெய்யவும், பின்னர், வேலை வாய்ப்புகளுக்கான தேவைகளைப் பெறவும் இந்தப் பிரிவுகள் உதவும்” என்று தொழிலாளர் அமைச்சகத்தின் அதிகாரி கூறினார்.
இந்த மொத்த பதிவுகளில் பெண் தொழிலாளர்கள் 51.61 சதவீதம் உள்ளனர். மொத்த பதிவுகளில் 61 சதவீதத்திற்கும் அதிகமானோர் 18-40 வயதுக்குட்பட்ட தொழிலாளர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மொத்த பதிவுகளில் 86.33 சதவீதம் வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்தவர்களில் 92 சதவீதம் பேர் மாத வருமானம் ரூ.10,000 மற்றும் அதற்கும் குறைவாகவும், 6 சதவீதம் பேர் ரூ.10,000-15,000 க்கு இடைப்பட்ட வருமானம் கொண்டவர்கள் என்று டேட்டா பதிவுகளில் வருமான வகைப்படுத்தலில் காட்டுகிறது. தவிர, 1 சதவீதத்தினர் ரூ.15,000-18,000க்கும் இடைப்பட்ட வருமானமும், 0.5 சதவீதத்தினர் ரூ.18,000-21,000க்கும் இடைப்பட்ட வருமானம் உள்ளவர்கள் என டேட்டாகள் தெரிவிக்கின்றன.
அமைப்புசாரா தொழிலாளர்கள் இ-ஷ்ரம் தளத்தில் பதிவுசெய்த பிறகு, அவர்கள் இ-ஷ்ரம் கார்டில் ஒரு பொது கணக்கு எண்ணைப் பெறுவார்கள். அது நாடு முழுவதும் செல்லுபடியாகும். அது பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களுடன் இணைக்கப் பயன்படும்.
விபத்துக் காப்பீட்டை இ-ஷ்ரம் தளத்தில் பதிவு செய்வதுடன் இணைத்து அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இ-ஷ்ரம் பதிவுசெய்த தொழிலாளி விபத்துக்குள்ளானால், அவர்/அவள் இறப்பு அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.2 லட்சமும், அரை ஊனமுற்றால் ரூ.1 லட்சமும் பெறத் தகுதியுடையவர்.
இந்த டேட்டாதளத்தை உன்னதி தளத்துடன் இணைக்கும் பணியைத் தொழிலாளர் அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. இது தொழிலாளர்களுக்கு வேலை தேடுவதற்கான தொழிலாளர்களுக்கு உதவும் தளமாக முன்மொழியப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/india/70-per-cent-informal-workers-sc-st-obcs-people-majority-in-farm-sector-370509/