வியாழன், 18 நவம்பர், 2021

ஆதிக்க கலாசாரத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை; நீதிபதி சஞ்சீப் பானர்ஜி கடிதம்

 17 11 2021 மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, பிரியாவிடை பெறும் நிகழ்ச்சியை தவிர்த்துவிட்டு சென்னையில் இருந்து புறப்பட்டுள்ளார். மேலும், நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, சக நீதிபதிகளுக்கும் நீதிமன்ற பதிவாளருக்கும் உயர் நீதிமன்ற ஊழியர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், நீங்கள் பணியாற்றி வரும் ஆதிக்க கலாசாரத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி கடந்த 11 மாதங்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த நிலையில், உச்ச நீதிமன்ற கொலிஜியம், நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்து பரிந்துரைத்தது.

உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரை உள்நோக்கம் கொண்டது என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலர், தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பணி இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டதற்கான உத்தரவில் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, பிரியாவிடை நிகழ்ச்சியை தவிர்த்து விட்டு சென்னையை விட்டுப் புறப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தன்னுடைய சக நீதிபதிகளுக்கும் நீதிமன்ற பதிவாளருக்கும், உயர் நீதிமன்ற ஊழியர்களுக்கும் நெகிழ்ச்சியான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி எழுதியிருப்பதாவது: “என்னுடைய அன்பான சென்னை உயர் நீதிமன்ற குடும்பத்தினருக்கு, நீதிமன்ற அமர்வில் என்னுடன் பணியாற்றிய சக நீதிபதிகளுக்கு முதலில், உங்களுடன் நேருக்கு நேர் இருந்து பிரியாவிடை சொல்ல முடியவில்லை என்பதற்காக வருந்துகிறேன். இரண்டாவதாக, எனது சில நடவடிக்கைகளால் உங்களில் சிலர் வருத்தமடைந்துள்ளதாக உணர்ந்தால் அவை எப்போதும் தனிப்பட்ட முறையிலானவை அல்ல என்பதை தயவு செய்து தெரிந்து கொள்ளுங்கள். அந்த நடவடிக்கைகள் நீதித்துறை கட்டமைப்புக்கு அவசியம் என்று நான் கருதினேன்.

நானும் ராணியும் (சஞ்சீப் பானர்ஜியின் மனைவி) எப்போதும் நீங்கள் எங்கள் மீது செலுத்திய மரியாதையாலும் அன்பாலும் நெகிழ்கிறோம்.

வழக்கறிஞர்களுக்கு: இந்த நாட்டின் சமூகங்களில் நீங்கள்தான் சிறந்தவர்கள். சில நேரம் அதிகம் பேசக்கூடிய இந்த வயதான நீதிபதியான என்னை அமைதியாக சகித்துக் கொண்டீர்கள். நான் கொண்டிருந்ததைவிட அதிகமாகவே மரியாதை செலுத்தினீர்கள், புரிந்து கொண்டீர்கள். உங்களுடைய கனிவான வார்த்தைகளுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

என்னுடைய பதிவாளருக்கு: , உங்களுடைய திறமைகள் நிர்வாகத்தை எளிமையாக்கியது. நீதித்துறை மற்றும் அதன் நடைமுறைகளை மேம்படுத்துவதில் நீங்கள் காட்டிய நேர்மையை நான் அங்கீகரிக்கிறேன். நீதித்துறை வெளிப்படைத்தன்மையையும் பொறுப்பையும் கடைபிடிக்க இதேபோல செயல்படுங்கள்.

நீதிமன்றத்தின் அனைத்து ஊழியர்களுக்கு: எனக்காக நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்த உங்கள் அனைவருக்கும் நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு, நீங்கள் பணியாற்றி வரும் நிலவுடைமை ஆதிக்க கலாசாரத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது.

நானும் ராணியும் எங்களுடைய மாநிலம் போல, உரிமையுடன் இந்த அழகான மற்றும் சிறந்த மாநிலத்தில் வாழ்ந்த கடந்த பதினோரு மாதங்களாக எனது பதவிக்காலத்தில் கிடைத்த உங்களுடைய அன்புக்கும் மரியாதைக்கும் எப்போதும் நன்றிக்கடன்பட்டுள்ளோம். அந்த நினைவுகளுடன் நாங்கள் புறப்படுகிறோம்.” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/justice-sanjib-banerjee-madras-high-court-farewell-message-370759/