23 11 2021
சேலம், கருங்கல்பட்டியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 4 வீடுகள் தரைமட்டமானது. இந்த சம்பவத்தில் 3 பெண்கள் ஒரு குழந்தை உள்பட 5 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட கருங்கல்பட்டியில் உள்ள பாண்டுரங்க நாதர் தெருவில் உள்ள கணேசன் என்பவருடைய வீட்டில் இன்று (நவம்பர் 23) காலை 6.30 மணிக்கு திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில், கணேசன், கோபி, தீயணைப்பு அலுவலர் பத்மநாபன், வெங்கட்ராஜன் ஆகிய 4 பேர்களின் வீடுகளும் இடிந்து தரைமட்டமானது.
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதால் இடிந்து தரைமட்டமானதால் இந்த 4 வீடுகளில் இருந்த 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் செவ்வாய்பேட்டை போலீசார் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் முதலில் மூதாட்டி ராஜலட்சுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தொடர்ந்து இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. தியணைப்பு சிறப்பு அலுவலர் பத்மநாபன், அவருடைய மனைவி தேவி, ராஜலட்சுமி (80), எல்லம்மாள், மற்றும் கார்த்திக்ராம் 5 பேர் உயிரிழந்தனர்.
மேலும், இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி, இடிபாடுகளில் சிக்கி வெங்கடராஜன் (62), இந்திராணி (54), மோகன் ராஜ் (40), நாகசுதா (30), கோபால் (70), தனலட்சுமி (64), சுதர்சன் (6), கணேசன் (37), உஷாராணி (40), லோகேஷ் (10) மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து, சேலம் போலீசார் கூறுகையில், மூதாட்டி ராஜலட்சுமி வீட்டில் காலையில் டீ போடுவதற்கு சமையல் எரிவாயு சிலிண்டர் அடுப்பை பற்றவைத்தபோது வெடித்து சிதறியுள்ளது. இதில், அருகே உள்ள வீடுகளும் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினருடன் பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் மாநகரம், கருங்கல்பட்டியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் 4 வீடுகள் இடிந்து விழுந்து விபத்து எற்பட்ட சம்பவ இடத்துக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மத்திய மாவட்ட செயலாளரும் , சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான இரா.இராஜேந்திரன் அவர்கள் மற்றும் சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்துராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன் அதிகாரிகளுக்கு மீட்புபணியை துரிதமாக செய்ய வலியுறுத்தினர். விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
source alem-lpg-cylinder-explosion-5-persons-killed-many-people-gets-injury-373203/