underwater excavation at Korkai : கடல்கொண்ட கொற்கையில் தமிழர்கள் நாகரீத்தின் தொன்மையும் வரலாறும் மறைந்திருக்கிறது என்று பல நெடுங்காலமாக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். பாண்டியர்களின் முதல் தலைநகரமாக விளங்கிய கொற்கை பாண்டிய நாட்டின் வணிகத் துறைமுகமாகவும், கப்பற்படைத் தளமாகவும் விளங்கியது. இப்பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்த தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாக தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். கலாச்சார விழுமியங்களை அழிக்கும் வகையில் நடந்து கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறிய அமைச்சர் தொல்லியல் களங்களில் குவாரிகள் நடத்தக் கூடாது என்றும் கூறினார்.
பசுமலையில் உள்ள திருமலை நாயக்கர் கல்லூரியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொற்கையில் நீருக்கடியில் தொல்லியல் துறை அகழாய்வு செய்து புதிய தொல்லியல் கண்டுபிடிப்புகளை அறிய அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறினார். மேலும் கலாசார பாரம்பரியத்தின் விழுமியங்களைப் பாதுகாப்பது நமது கடமை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொல்லியல் துறை அகழாய்வு குறித்து பல அறிவிப்புகளை வெளியிட்டு ஆராய்ச்சிகளை நடத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளார் என்பதையும் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இதர அறிவிப்புகள்
கீழடியில் ஏற்கனவே 7 கட்ட ஆய்வுப் பணிகள் முடிவுற்ற நிலையில் தமிழக அரசின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 8ம் கட்ட அகழ்வாய்வு பணிகளும், கங்கை கொண்ட சோழபுரத்தில் அகழ்வாய்வு பணிகளும் நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் கூறினார்.
சங்கக்கால துறைமுகமாக திகழ்ந்த முசிறியில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும். மன்னர் ராஜேந்திர சோழன் படையெடுப்பு வாயிலாக வெற்றி பெற்ற இடங்களுக்கு தொல்லியல் துறையினர் அனுப்பப்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.
சென்னை அருங்காட்சியகத்தில் உலகத்தரம் வாய்ந்த புதிய கட்டிடம் அமைப்பதற்கும், நெல்லையில் தொன்மை நாகரீகம், கட்டமைப்பு உருவாக்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு திட்டவரைவு அறிக்கை தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-government-likely-to-conduct-underwater-excavation-at-korkai-375710/