நாட்டின் தலைநகர் டெல்லியில், கடந்த சில மாதங்களாக காற்றின் தரம் மிகவும் மோசமாக காணப்பட்டு வருகிறது. குறிப்பாக தீபாவளிக்குப் பிறகு காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிற்கு மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால் பொது மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி இருகின்றனர்.
காற்றின் தரத்தை உயர்த்தும் நடவடிக்கையாகவும், சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் அறிவுறுத்தல்களின்படியும் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தவிர பிற வாகனங்கள் டெல்லி மாநகர் பகுதிக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மறு உத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், ஆன்லைன் கற்பித்தல்-கற்றல் நடவடிக்கைகள் மற்றும் வாரிய வகுப்புகளுக்கான தேர்வுகள் முன்பு வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லி அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், “அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தவிர பிற வாகனங்கள் டெல்லி மாநகர் பகுதிக்குள் நுழைவதற்கு நவம்பர் 26ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேதி நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. மாநில அரசு / தன்னாட்சி அமைப்புகள் / பெருநிறுவனங்களின் அனைத்து அலுவலகங்களும் நவம்பர் 26, 2021 வரை மூடப்பட்டிருக்கும். அவசர சேவை, மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து தனியார் அலுவலகங்கள் / நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றன. இதனால் நவம்பர் 26, 2021 வரை சாலைகளில் குறைந்த வாகன இயக்கத்தை உறுதி செய்ய வேண்டும்,” என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த சில நாட்களில், டெல்லியில் காற்றின் தரம் ‘மோசமான’ பிரிவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும், பின்னர் வாரத்தின் பிற்பகுதியில் மீண்டும் ‘மிகவும் மோசமான’ பிரிவுக்கு நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் டெல்லியில் இன்று காற்று தரக் குறியீடு 352 ஆக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நேற்றைய காற்று தரக் குறியீடு 347-ஐ விட அதிகமாகும்.
source https://tamil.indianexpress.com/india/delhi-air-pollution-tamil-news-schools-to-remain-closed-govt-mcd-employees-to-work-from-home-372491/