வெள்ளி, 17 டிசம்பர், 2021

வன்னியர் 10.5% இடஒதுக்கீடு சட்டம் ரத்துக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

 Tamil news, tamil nadu news, 10.5% reservation, Madurai Branch Chennai High Court

உச்ச நீதிமன்றம்

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை விதித்த தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கும் வகையில், 10.5% இடஒதுக்கீடு அளித்து கடந்த பிப்ரவரி மாதம் அப்போதைய அதிமுக அரசு சட்டம் இயற்றியது. இந்த ஒதுக்கீடு மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக வழங்கப்பட்டது.

இதனையடுத்து, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள வன்னியர் அல்லாத பிற சாதிகளைச் சேர்ந்தவர்கள் இந்த சட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவற்றை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

அப்போது, நீதிபதிகள், சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அதை செய்யாமல் எப்படி இடஒதுக்கீட்டை வழங்க முடியும்? அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டே இந்தச் சட்டம் அவசரமாக இயற்றப்பட்டுள்ளது. இதனை இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா? என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டம் செல்லாது என்று உத்தரவிட்டனர்.

இந்த ரத்து உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பலர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த 12 மனுக்கள் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் ரத்து உத்தரவிற்கு தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

மேலும் வழக்கு விசாரணை முடியும் வரை இந்த ஒதுக்கீட்டில் புதிய நியமனங்கள் மற்றும் மாணவர் சேர்க்கையை செய்யக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/sc-refuses-to-lift-ban-on-10-5-reservation-for-vanniyar-384096/