முஸ்லிம் அமைப்பு குறித்து அவதூறு கூறியதாக யூடியூபர் மாரிதாஸ் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 பேர் உயிரிழந்தது தொடர்பான சம்பவத்தில் திக மற்றும் திமுகவினர் மீது சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பதிவிட்டதற்காக மதுரையைச் சேர்ந்த யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார்.
பின்னர் மோசடி வழக்கிலும் யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். தனியார் தொலைக்காட்சியின் மூத்த பத்திரிக்கையாளர் அளித்த மோசடி புகாரின் பேரில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் மாரிதாஸ் மீதான தேசத்துரோக வழக்கில், மாரிதாஸ் மீது வழக்கு பதிந்தது செல்லாது என கூறிய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் எதுவும் இந்த வழக்கில் செய்யப்படவில்லை என்று கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மாரிதாஸ் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், மற்றொரு மோசடி வழக்கிலும் கைதாகியுள்ளதால், சிறையிலிருந்து அவர் விடுதலையாக முடியாத நிலை இருந்தது.
இந்தநிலையில், மதமோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக, மாரிதாஸ் மற்றொரு அவதூறு வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனாவைப் பரப்பியவர்கள் என கூறி தப்லிக் ஜமாத் அமைப்பு குறித்து அவதூறு கூறியதாக மாரிதாஸ் மீது அந்த அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் நெல்லை காவல்துறையில் புகார் அளித்திருந்தது. அந்த புகாரின் அடிப்படையில் தற்போது யூடியூபர் மாரிதாஸ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, மாரிதாஸை நெல்லை காவல்துறை கைது செய்துள்ளது. இன்று கைது செய்யப்பட்டுள்ள மாரிதாஸ், நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கபட்டார். அவரை டிசம்பர் 30 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/youtuber-maridhas-arrested-in-another-case-filed-by-muslim-movement-384066/