7 12 2021
தமிழகத்தில் பழவேற்காடு, வெள்ளோடு, வேடந்தாங்கல், கோடியக்கரை, கூந்தன்குளம், வேட்டங்குடி மற்றும் கரைவெட்டி உள்ளிட்ட 15 இடங்களில் பறவைகள் சரணாலயம் உள்ளன. தமிழக அரசு விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கழுவேலி சதுப்பு நிலத்தை பறவைகள் சரணாலயமாக அறிவித்து டிசம்பர் மாதம் 6ம் தேதி அன்று அரசாணையை வெளியிட்டது. மத்திய ஆசியாவை கடக்கும் வலசைப் பறவைகளின் முக்கியமாக தங்குமிடமாக அமைந்துள்ளது கழுவேலி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு பறவைகள் தங்களின் இனப்பெருக்க காலத்தை இங்கே செலவிடுகின்றன.
கழுவேலி ஈரநிலம் அல்லது சதுப்பு நிலம் என்பது கடற்கரை சதுப்பு நில ஏரியாகும். புதுவையில் இருந்து 16 கி.மீ தொலைவிலும் ஆரோவில்லில் இருந்து 10 கி.மீ தொலைவிலும் இந்த ஏரி அமைந்துள்ளது.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள ட்விட்டரில் சூழலியல் பாதுகாப்பில் தனி அக்கறை செலுத்தி வரும் கழக அரசில் போடப்பட்டுள்ள இந்த ஆணை,பல்லுயிர் மற்றும் பறவைகள் பாதுகாப்பில் முக்கியப் பங்களிப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மொத்தமாக இந்த சரணாலயத்தின் பரப்பளவு 5,151 ஹெக்டேர் ஆகும். மரக்காணம் தாலுகாவில் அமைந்துள்ள நடுக்குப்பம், செய்யாங்குப்பம், செட்டிக்குப்பம், அனுமந்தை, ஊரணி, கீழ்புதுப்பட்டி, கூனிமேடு, திருக்கனூர், கிளாம்பாக்கம், கொழுவாரி, கழுபெரும்பாக்கம் தாலுகாவில் உள்ள வானூர், தேவனான், காரட்டை ஆகிய கிராமங்கள் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பறவை சரணாலயத்தின் எல்லைக்குள் அமைந்துள்ளது.
கழுவேலி ஈரநிலத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க அதிமுக அரசால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த அரசாணை கழுவேலியில் வருங்காலத்தில் எந்தவிதமான, இயற்கைக்கு ஆபத்தைத் தூண்டும், மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்த இயலாது. கழுவேலியின் எல்லையில் இருந்து 10 கி.மீ சுற்றளவு சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக, (Eco-Sensitive Zone (ESZ)) பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்கும் ஒன்றாக செயல்படும். கழுவேலிக்கு அருகே அமைந்திருக்கும் எடையான்திட்டு கழிமுகம் வரை இந்த உணர்திறன் மண்டலம் நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீன்பிடி துறைமுகம் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில் இந்த பகுதியில் ஓடும் உப்புக்கலி சிற்றோடை தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும். கடற்பாசி புல்வெளிகல், சிப்பிப்பாறைகள், மற்றும் உப்பு சதுப்பு நிலங்கள் (Brackish water wetland) முழுமையாக அழிக்கப்பட்டு இந்த பகுதியில் மண் அரிப்பிற்கு வழி வகை செய்திருக்கும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-declares-kazhuveli-wetlands-as-bird-sanctuary-379968/