புதன், 8 டிசம்பர், 2021

இந்தியாவின் அலுவல் மொழிகளில் ஒன்றாக தமிழை அறிவிக்க வேண்டும் – தமிழக அரசு கோரிக்கை

 8 12 2021 Tamil as official language, Lok sabha

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு, பெரம்பலூர் தொகுதி எம்.பி. டி.ஆர். பாரிவேந்தர் தமிழை அலுவல் மொழியாக அறிவிப்பது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் திருப்பதியில் நடைபெற்ற தெற்கு மண்டல கவுன்சிலில், இலங்கை மற்றும் சிங்கப்பூரில் ஆட்சி மொழியாக தமிழ் இருப்பது போன்று தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என்றும் தேசிய நூலாக திருக்குறளை அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக முடிவுகள் எட்டப்பட்டதா என்ற கேள்வியை முன் வைத்தார் பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்.

இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த இந்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், தமிழக அரசு ஏற்கனவே தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த ஆண்டு நவம்பர் 14ம் தேதி அன்று நடைபெற்ற 29வது தெற்கு மண்டல கவுன்சிலில் கோரிக்கை வைத்தது.

ஆனால் இது தொடர்பான விவாதங்கள் ஏதும் நடைபெறவில்லை என்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அவர் குறிப்பிட்டுள்ளார். நவம்பர் 29ம் தேதி அன்று துவங்கிய குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 23ம் தேதி வரை தொடரும்.

இந்தியாவின் அலுவல் மொழியாக ஆங்கிலமும் இந்தியும் செயல்பாட்டில் உள்ளது. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கான தொடர்பு மொழியாகவும் ஆங்கிலம் இருந்து வருகிறது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு (இந்தி பேசாத) இடையேயான தொடர்பு மொழியாகவும் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற பயன்பாட்டு மொழியாக இருக்கும் ஆங்கிலத்தில் தான் தீர்ப்புகள், உத்தரவுகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதே போன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள், நிறைவேற்றப்படும் மசோதாக்கள், மாற்றங்கள் மற்றும் அவசர சட்டங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் வெளியிடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-requested-centre-to-declare-tamil-as-official-language-of-country-mos-home-in-ls-380146/