8 12 2021
Chennai city Tamil News: சென்னையில் இயங்கி வரும் மத்திய அரசின் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐஐடி- மெட்ராஸ்) கடந்த நவம்பர் 20-ம் தேதி 58வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டு, சமஸ்கிருதத்தில் இறைவணக்கம் பாடப்பட்டது. இதற்கு பல்வேறு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கடும் எதிர்ப்பினை பதிவு செய்திருந்தனர். ஐஐடி நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் பூஜ்ய நேரத்தின் போது பேசிய திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை ஐஐடி-யில் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், ஐஐடி-யின் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை மத்திய கல்வி அமைச்சகம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் பேசியது பின்வருமாறு:-
“சென்னை ஐஐடி-யில் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படுவது வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. இது மாநில அரசின் மரபை மீறும் செயல். 1970ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் அறிமுகம் செய்யப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து, அனைத்து அரசு விழாக்களிலும் பாடப்படுவது வழக்கமாகும். இதனை ஐஐடி தொடர்ந்து மீறி வருகிறது.
கடந்த 2018ம் ஆண்டிலும் ஐஐடி-யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது. சமஸ்கிருதத்தில் பாடல் பாடப்பட்டது. நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. நாங்கள் அனைத்து மொழிகளையும் விரும்புகிறோம். ஆனால் தமிழை வணங்குகிறோம். எனவே, சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை மத்திய கல்வி அமைச்சகம் உறுதிப்படுத்த வேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.